முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மருத்துவர் இல்லாததால் குழந்தை இறந்ததாக புகார்: உறவினர்கள் போராட்டம்
By DIN | Published On : 04th August 2019 03:26 AM | Last Updated : 04th August 2019 03:26 AM | அ+அ அ- |

திருச்சி அருகே மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாகக் கூறி, பெண்ணின் உறவினர்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், புலிவலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசுவரன்(27). இவரது மனைவி பவித்ரா(21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வெள்ளிக்கிழமை இரவு பிரசவ ஏற்பட்டதால், அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் இரவு முழுவதும் பவித்ரா வலியால் அவதியுற்றார்.
இதையறிந்து அங்கு பணியிலிருந்த செவிலியர் ரம்யா, மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பிரசவம் பார்த்ததால் அதிகாலையில் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தாததால், சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு, பவித்ரா உறவினர்களிடம் செவிலியர் ரம்யா தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் வசதி அந்த நேரத்தில் கிடைக்க ஏற்பட்ட தாமதத்தால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.
இதையறிந்த பவித்ரா உறவினர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் லெனின், ஒன்றியச் செயலர் அஜீத் உள்ளிட்டோருடன் இணைந்து ஜீயபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்து அங்கு வந்த மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் உஷா, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர்.