முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
65- ஆவது வார்டு பகுதிகளில் மெகா தூய்மைப்பணி
By DIN | Published On : 04th August 2019 03:27 AM | Last Updated : 04th August 2019 03:27 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65-ஆவது வார்டு பகுதிகளில், சனிக்கிழமை மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.
மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில், திருச்சி மாநகராட்சி கடந்த 4 ஆண்டுகளாக இடம்பிடித்து வருகிறது. இந்தாண்டு முதலிடத்தைப் பிடிக்கும் வகையில், மாநகராட்சியால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை ஒரே இடத்தில் சேகரித்து வைக்காமல், இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் வகையில் 30 இடங்களில் உர செயலாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து, மாநகரில் எங்கும் குப்பைகள் இல்லாத வகையில், திருச்சி பிளாக்கிங் எனும் திட்டத்தில் அதிகாலை நடைப்பயிற்சியின்போது மாநகராட்சிப் பணியாளர்களுடன் பொதுமக்கள் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதன்படி, பொன்மலை கோட்டம், 65-ஆவது வார்டுக்குள்பட்ட அண்ணா விளையாட்டு அரங்கம், ரேஸ்கோர்ஸ் சாலை, குடியிருப்புப் பகுதிகள், பிரதான சாலைகள் முழுவதும் தூய்மைப்படுத்தும் வகையில் சனிக்கிழமை மெகா தூய்மைப் பணி நடைபெற்றது. தூய்மை பணியை மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார்.200-க்கும் மேற்பட்டோர் பணியில் பங்கேற்றனர்.
நிகழ்வில் உதவி ஆணையர் தயாநிதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கே. பிரபு, நிர்வாக அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் தலைவிருச்சான் மற்றும் சுகாதார அலுவலர்கள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.