கோரிக்கைகளை நிறைவேற்ற அரசிடம் வலியுறுத்த வேண்டும்: பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகிகள் திருச்சி சிவாவிடம்  மனு

தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தக் கோரி,  மாநிலங்களவை

தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தக் கோரி,  மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவாவை  பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஞாயிற்றுக் கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநிலத் துணைச் செயலர் எஸ். காமராஜ், தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாநிலச் செயலர் மு. ரவீந்திரன், மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள்  திருச்சி சிவாவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
கடந்த 2000 ஆம் ஆண்டில் உருவான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அப்போதைய பா.ஜ.க. அரசு   பணி பாதுகாப்பு உத்தரவாதம் செய்தல், உரிமக் கட்டணங்களிலிருந்து விலக்கு அளித்தல், கிராமப்புற சேவை மூலம் ஏற்படும் இழப்பீடுகள் ஈடுசெய்தல், பிற நிறுவனங்களுக்கு வழங்கும் சேவை தேய்மான செலவு (ஏடிசி கட்டணம்) வழங்கல், நிதி ஆதாரம் பாதுகாத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. ஆனால்,  இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இதனை விரைந்து நிறைவேற்றவேண்டும்.  மேலும், தொழில்நுட்ப மேம்பாட்டின் போது பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையும், தனியார் நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கையும் வைத்து ஒப்பீடு செய்தல் தவறானது. 
எனவே, விருப்பு ஓய்வு எனும் பெயரில் பிஎஸ்என்எல் ஊழியர்களைக்  கட்டாயமாக வெளியேற்றுதல் கூடாது.போதிய நிதியின்மை காரணத்தால் பராமரிப்பில்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும்.
 பிஎஸ்என்எல் சேவைக்காக உயர்கோபுரங்கள் அமைக்க இடம் வழங்கியவர்களுக்கும், ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கும்  கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள வாடகை மற்றும் ஊதியத்  தொகையை விரைந்து வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் மீது  நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்புத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட  மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா,   பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்கவும், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் மத்திய அரசிடம் வாதாடுவேன் என உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com