காஷ்மீர் விவகாரம்: திருச்சி மண்டலத்தில் கூடுதல் பாதுகாப்பு
By DIN | Published On : 07th August 2019 09:26 AM | Last Updated : 07th August 2019 09:26 AM | அ+அ அ- |

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்புக்கென மாநகர் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டு, மக்கள் ஜனநாயக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அதுபோல், பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் அதை வரவேற்றுள்ளன. இதனால், நாட்டில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருச்சி மண்டலம் மற்றும் திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 108-க்கும் மேற்பட்ட பதற்றமான இடங்கள், மாநகர் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலமான ஸ்ரீரங்கம், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் ஆகிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விமான நிலையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பணியில் உள்ளனர். சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பு வெளியானதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட பாஜக பிரமுகர், இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.