திருச்சிராப்பள்ளி திருமுறை மன்ற விழா

திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்ற 28 ஆவது ஆண்டு தொடக்க விழா, திரு நெறிய தெய்வத்தமிழ் 25 ஆவது ஆண்டு பண்ணிசை விழா ஆகியவை


திருச்சி: திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்ற 28 ஆவது ஆண்டு தொடக்க விழா, திரு நெறிய தெய்வத்தமிழ் 25 ஆவது ஆண்டு பண்ணிசை விழா ஆகியவை திருச்சியில் இரு நாள்கள் நடைபெற்றன.
சனிக்கிழமை காலை தொடங்கிய கருத்தரங்கில், இந்து அறநிலையத்துறை, தாயுமானசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் டி. விஜயராணி தொடக்கவுரையாற்றினார். திருவானைக்கா, சிவராகவன் ஐயா, ஏதங்கள் நம்பால் நீக்கும் இருபெரும் தகையோரே என்ற தலைப்பில் அருளுரையாற்றினார். மாலையில் நடைபெற்ற நிகழ்வில் 103 ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையேற்றுப் பேசினார். ஆத்தூர், திருநாவுக்கரசர் உழவாரத் திருக்கூட்டம் அ. திருநாவுக்கரசு - சிவக்கொழுந்தினைச் சென்றடை மனமே என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். 
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 ஆவது நாள் நிகழ்வில், திருமுறை திருவீதியுலா நடைபெற்றது. அடியார்கள் புடைசூழ  சமையாசிரியர் நால்வர் திருமேனிகள், திருத்தேரில் எழுந்தருளி மலைக்கோட்டை உள் மற்றும் வெளி வீதிகளில் பன்னிரு திருமுறைகள் திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற திருவாசகமும்-திருக்கோவையாரும் என்பது குறித்து, சிவத்திரு ரமணிஅம்மாள் - சேட்படை என்ற பொருளில் உரை நிகழ்த்தினார்.
மாலையில்  மலர் வெளியிட்டும், விருதுகள் வழங்கியும், முனைவர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சிவத்திரு தில்லை வே. ரமணன் திருத்தொண்டர் புராணத்தில் தில்லை என்ற பொருளில் கருத்துரையாற்றினார்.  ஆத்தூர் அ. திருநாவுக்கரசு- சைவத்தமிழ் அறிஞர் விருதையும், காஞ்சிபுரம் தி. கதிர்வேல் சுப்பிரமணிய ஓதுவார் - தருமபுரம் இர. வேலாயுத ஓதுவாமூர்த்தி நினைவு- திருமுறை இசையரசு விருதையும் பெற்றனர். தாயுமானவர் சுவாமி சீர்பாதம் அடியவர்கள், குழுமணி-முற்றோதல் குழு, உறையூர்- எம்பிரான் செந்தமிழ்ச் சுந்தரர் புனிதர் பேரவை, வாளாடி-திருவாசக மன்றம் ஆகிய திருமுறைகள் தொண்டாற்றி வரும் அமைப்புகள் பாராட்டப்பெற்றன. நிகழ்வில் மன்றச் செயலர் திருக்குறள் சு. முருகானந்தம், பொருளாளர் கு.சி.ந. மாணிக்கவாசகம், துணைத் தலைவர் வே. சாத்தப்பன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com