சுடச்சுட

  

  ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு மங்களப் பொருள்கள் சமர்பிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
  ஆண்டுதோறும் ஆடி மாதம்  28 ஆம் தேதி காவிரிக்கு நம்பெருமாள் எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்களப் பொருள்கள் சமர்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆடி 28-ஐ முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை  6.30 மணியளவில் தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தை 11.30 மணியளவில்  வந்தடைந்தார். 
  அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் அலங்காரம் அமுது செய்து திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் 4.45 மணியளவில் நம்பெருமாள் முன்பு வைக்கப்பட்டிருந்த  புடவை, மாலை, தாலிக்கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருள்களை யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி ஆற்றின் நடுக்கரைக்கு சென்று காவிரி தாயாருக்கு சமர்பித்தனர்.
  இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் சேவைக்கு பிறகு மேற்படி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணியளவில் புறப்பட்டு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார் நம்பெருமாள். இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விஸ்வரூப தரிசனம் நடைபெறவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai