சுடச்சுட

    

    முக்கொம்பு மேலணையில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் ஆய்வு: "எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அணைக்கு எந்த பாதிப்பும் வராது'

    By DIN  |   Published on : 14th August 2019 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் கே. மணிவாசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    கடந்த ஆண்டு ஆக. 22 ஆம் தேதி காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 8 மதகுகள் உடைந்தன. இதைத் தொடர்ந்து, ரூ.387.60 கோடியில் புதிய கதவணை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 
    ரூ.38.85 கோடியில் தற்காலிக காப்பணை கட்டும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக அணைகள் நிரம்பி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள காவிரிக் கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
    திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு கொள்ளிடத்தில் நடைபெறும் தற்காலிக காப்பணை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். 
    இதன்படி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் கே. மணிவாசன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் முக்கொம்பில் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் முதன்மைச் செயலர் கே. மணிவாசன் கூறியது:
    கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் விரைவாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு நாள்களில் தற்காலிக காப்பணைக்கான பணிகள் நிறைவடையும். எவ்வளவு கன அடி தண்ணீர் வந்தாலும் தாங்கக்கூடிய வகையில் இந்த தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அணைக்கோ, மதகுகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களும், விவசாயிகளும் கவலைப்பட தேவையில்லை. 24 மணிநேரமும் காவிரியில் வரும் தண்ணீர் வரத்தை கண்காணித்து வருகிறோம். அதற்கேற்ப அளவீடுகளை நிர்ணயித்து தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
    கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேலணைக்கான கட்டுமானப் பணிகள் 2021 மார்ச் மாதம் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.
    ஆய்வின்போது, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இறுதிக் கட்டத்தில் காப்பணை கான்கிரீட் பணி 
    மதகுகள் உடைந்த பகுதியில் 110 மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் தடுப்பும், இதர 45 மதகுகள் தொலைவுக்கும் இரும்பு தகடுகளை பதித்து கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் இதுகுறித்து மேலும் கூறியது:
    கான்கிரீட் அமைக்கும் பணி இரவு, பகலாக துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆக.17ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். இருப்பினும், தண்ணீர் வரத்தை கருத்தில் கொண்டு எளிதில் திடமாகும் வகையிலான கான்கிரீட் கலவைகளை தயார் செய்து கொட்டப்பட்டு வருகிறது. 
    80 சதவீத கான்கிரீட் பணி முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகளையும் ஓரிருநாள்களுக்குள் முடித்துவிடுவோம். அதற்குள்ளாகவே தண்ணீர் வந்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது. எத்தகைய திறனையும் எதிர்கொள்ளும் வகையில் காப்பணையின் இரும்புத் தகடுகள் பைல் (ஆழ்குழாய் பதிப்பு) முறையில் பதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், விவசாயிகளும் அச்சப்படத் தேவையில்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai