கொலை மிரட்டல் : எஸ்.ஐ. மீது சமூக ஆர்வலர் புகார்

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் லால்குடி காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக சமூக ஆர்வலர் பாரதி மோகன் புதன்கிழமை தெரிவித்தார்.

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் லால்குடி காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக சமூக ஆர்வலர் பாரதி மோகன் புதன்கிழமை தெரிவித்தார்.
 இதுகுறித்து திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
 லால்குடியில் மக்கள் நல இயக்கம் சார்பில் லால்குடி கிருஷ்ணாபுரம் வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தன் பேரில்
 ஜூலை 17 இல் தூர்வாரப்பட்டது. இந்த வாய்க்காலின் ஒரு பகுதியில் திருச்சி மாநகர க்யூ பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் நெருங்கிய உறவினரின் வீட்டின் மதில் சுவர் வருகிறது. இதைத்தொடர்ந்து, ஆக. 6 ஆம் தேதி ஆக்கிரப்பு அகற்ற வந்தபோது டிஎஸ்பியின் உறவினரான முன்னாள் பேரூராட்சி தலைவர் சாரதா உன்னிகிருஷ்ணன் பணிகளைத் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, லால்குடி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் என்னை செல்லிடப்பேசியில் அழைத்து காவல் நிலையம் வரச்சொல்லி ஒருமையில் திட்டியதோடு, 2 நாள்கள் சிறையில் அடைத்து வைத்தனர். மேலும், என் மீது பொய் வழக்கையும் பதிவு செய்தனர்.
 மேலும், எனக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, காவல் ஆய்வாளர், டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளேன் என்றார். இதுகுறித்து லால்குடி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் கூறியதாவது:
 சமூக ஆர்வலர் பாரதிமோகன் பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். ஆக்கிரமிப்பு விஷயத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினர் அளவிட்ட இடத்தில் டிஎஸ்பி உறவினர் வீட்டின் மதில்சுவர் வரவில்லை. தேவையில்லாது அக்குடும்பத்தினரிடம் பிரச்னை செய்ய முற்பட்டார். மேலும், லால்குடியில் திரையரங்கம் முன்பு பாரதிமோகன், மற்றொரு தரப்பினரும் பொது இடத்தில் தகராறு செய்ததாக 6 பேரின் மீது அண்மையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர் கூறியது: சம்பந்தப்பட்ட வீட்டின் மதில் சுவரையொட்டி மண் எடுத்தால் மதில் சுவர் விழுந்து விடும் என வீட்டின் உரிமையாளர் கூறியதால் மதில்சுவருக்கு 2 அடிக்கு முன்பாக எல்லைக் கற்கள் அமைத்து பணிகள் மேற்கொண்டோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com