சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்: கிராமப்புறங்களிலும் பிளாஸ்டிக் உற்பத்திக்குத் தடை: ஆட்சியர்

கிராமப்புறங்களிலும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்தார்.

கிராமப்புறங்களிலும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்தார்.
நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட துறைக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சிறப்புப் பார்வையாளராகக் கலந்து கொண்டு ஆட்சியர் சு. சிவராசு மேலும் பேசியது:
கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ளவும் கிராம சபை கூட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுமட்டுமல்லாது கிராம மக்களின் தேவைகள், பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வு காணும் வாய்ப்பையும் கிராம சபை அளிக்கிறது. கிராமங்களின் வளர்ச்சிக்கு மத்திய,  மாநில அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்கி வருகின்றன. 
திருச்சி திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக செயல்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது நகர்ப்புறங்களில் உள்ளதைப் போன்று கிராமப்புறங்களிலும் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 
100 வேலைநாள் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பத்தை இயக்கமாக மேற்கொள்ள வேண்டும். மழை பெறுவதற்கு வீடுகள்தோறும் மரம் வளர்ப்பது அவசியமானது. தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவதற்கு வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் நிதியுதவியை பெற்று கிராமப்புறங்களில் வீடுகள்தோறும் கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்றார்.
தொடர்ந்து துரைக்குடி ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பசுமை வீடு கட்டும் திட்டம், ஜல்சக்தி அபியான் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், திடக்கழிவு மேலாண்மை, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, கொசுக்கள் ஒழிப்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சிக்கு காவிரிக் குடிநீர் விநியோகிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், சார் -ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆர்.தண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, வட்டாட்சியர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மணப்பாறை, துறையூர், முசிறி பகுதிகளில்...
மணப்பாறை புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டட வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான கே.எம்.கலையரசி  தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதேபோல், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் ஆகிய அரசு அலுவலகங்களில் அந்தந்த துறை அதிகாரிகள் மற்றும் தனி அலுவலர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். நகராட்சி அலுவலகத்தில் கலை நிகழ்ச்சிகள நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்... திருச்சி சாலையில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை அருகே தமாகா திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் டி. குணா தலைமையில் அக்கட்சியினர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். தொடர்ந்து அண்ணல் காந்தியடிகள் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சமுத்திரம்.கணேசன், மாவட்ட பொதுச்செயலர் அம்மன்.ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர். 
துறையூர்...: துறையூர் நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி கே. சிவகுமார் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றிவைத்தார்.  நீதிபதிகள்  ஆறுமுகம், புவியரசு உள்பட வழக்குரைஞர்கள்  பங்கேற்றனர். துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதனும், வட்டாட்சியர் சத்தியநாரயணன், துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பாலசந்தர், உப்பிலியபுரம் சத்தியவர்தனும், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி ஆகியோர் அவரவர் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றினர். துறையூர் அருள்மிகு நந்திகேசுவரர் கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொதுவிருந்து நடைபெற்றது. 
முசிறியில்...: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், முசிறி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வேலுச்சாமி, முசிறி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி  தமிழ்மாறன்,  முசிறி பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலர் புஷ்பா, முசிறி அறிஞர் அண்ணா  அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் (பொ) முருகராஜ்பாண்டியன்,முசிறி எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரியின் துணை தலைவர் பிரவீன்குமார், தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் கல்லூரி தலைவர் பிஎஸ்கே பெரியசாமி ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.  இதேபோல துறையூர், முசிறி மற்றும் தொட்டியம் ஆகிய பகுதியில் உள்ள நூலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில்...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையினரின்  மரியாதையை ஏற்று அவர் மேலும் பேசியது: என்.ஐ.டி திருச்சி, இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இக்கல்லூரியை உலக அளவில் முதல் 500 இடங்களுக்குள் கொண்டு வர அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும் என்றார். கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டன. 
பாரதிதாசன் பல்கலை.யின்... பேரூர் வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் துணைவேந்தர் ப.மணிசங்கர் தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் என்.எஸ்.எஸ், தேசிய மாணவர் படை  
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.  நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் சசிதர் முலுகு, தேர்வு நெறியாளர் துரையரசன், நிதி அலுவலர் லெ.கணேசன், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் லஷ்மி பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர். காஜாமலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பதிவாளர் க.கோபிநாத் தேசியக்கொடி ஏற்றினார். 
திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிக். பள்ளியில்... கிளாரிநெட் வித்வான் ஏ.கே.சி நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
விழாவில் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், நலம் மருத்துவமனை மருத்துவர் செந்தில்வேலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
நிகழ்வில் பள்ளியின் தலைவர் ராமசாமி, செயலர் சுவாமிநாதன், பொருளாளர் செல்வராஜன், துணைத்தலைவர் குமரவேல், இணைச் செயலர் சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் துளசிதாசன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தில்... திருச்சி சிறுகனூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,  தமிழ்நாடு மின்வாரிய திருச்சி, செயற்பொறியாளர் மேரி மெக்டலின் பிரின்சி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி அவர் மேலும் பேசியது:  நாட்டில் இயற்கை வளங்களைப் போலவே மின்சாரத்தையும் பாதுகாக்கவும் சேமிக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். கல்லூரி தலைமை இயக்குநர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார். இணை இயக்குநர் மருத்துவர் என்.பாலசுப்பிரமணியன் வாழ்த்திப்  பேசினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரசியல் கட்சிகள் சார்பில்...
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசல மன்றத்தில் மாவட்டத் தலைவர் ஜவகர் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதில், மாநில நிர்வாகி சுப.சோமு, முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.சி பாபு, வழக்குரைஞர்கள் சரவணன், ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் அரவானூர் விச்சு, ரெக்ஸ், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
திருச்சி அருகே உள்ள புங்கனூரில் தமாகா மாவட்டத் தலைவர் செல்வம் தேசியக் கொடியேற்றினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மாநில பொதுச் செயலர் நிஜாம்முகைதீன் தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்வில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டப் பொருளாளர் ஜான்பால் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் தேசிய கொடியேற்றி வைத்தார். தமிழ்நாடு ஏஐடியுசி மாநில, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com