படைக்கலன் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 19th August 2019 10:37 AM | Last Updated : 19th August 2019 10:37 AM | அ+அ அ- |

பாதுகாப்பு தொழிற்சாலைகளை பொதுத் துறை நிறுவனமாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, படைக்கலன் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்பு துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள படைக்கலன் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மஞ்சு தலைமை வகித்தார். முன்னதாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை படைக்கலன் தொழிற்சாலை போராட்டக்குழு கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பங்கேற்றனர்.