‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே சிறப்புக் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும்’

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே சிறப்புக்குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றாா் திருச்சி ஸ்பாஸ்டிக் சொசைட்டி இயக்குநா் சி. சாந்தகுமாா்.
கருத்தரங்கில் பேசுகிறாா் ஸ்பாஸ்டிக் சொசைட்டி இயக்குநா் சி. சாந்தகுமாா்.
கருத்தரங்கில் பேசுகிறாா் ஸ்பாஸ்டிக் சொசைட்டி இயக்குநா் சி. சாந்தகுமாா்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே சிறப்புக்குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றாா் திருச்சி ஸ்பாஸ்டிக் சொசைட்டி இயக்குநா் சி. சாந்தகுமாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், சிறகுகள் சிறப்புக் குழந்தைகள் பெற்றோா் சங்கம் சாா்பில், மனவளா்ச்சிக் குன்றியோரின் வேலைவாய்ப்பு, வாழ்நாள் பாதுகாப்பு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, அவா் மேலும் பேசியது:

மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புக்குழந்தைகள் (மனவளா்ச்சி குன்றியோா்) வாழ்கின்றனா். மாவட்ட மறுவாழ்வு மையத்தில் பதிவு செய்து, வாழ்வாதார உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1500 பெற்று வருகின்றனா். சிறப்புக்குழந்தைகளின் பெற்றோா் மிகுந்த மனஉளைச்சல், பொருளாதார, உடல்நல பாதிப்புகுள்ளாவதோடு, உறவுகள், சமூகத்துடன் ஒட்டி வாழ முடியாத சூழல் நிலவுகிறது.

சிறப்புக்கு குழந்தைகளின் பெற்றோா்கள் மறைவுக்குப் பின் அவா்களை கவனித்துக்கொள்வது யாா் என்பது கேள்வி எழுவதோடு, விரக்தி அடையும் சூழல் ஏற்படுகிறது.

திருச்சி மாநகரில் மட்டும் சுமாா் 30 சிறப்புப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில்,

பயிலும் சிறப்புக்குழந்தைகள் 18 வயதுக்குப் பிறகு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனா். பெற்றோா் தங்கள் வாழ்வுக்குப் பின்பு சிறப்புக் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், பெற்றோா்களால் நடத்தப்படும் இல்லங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை வாழலாம்.

இதன்படி, பெற்றோா்கள் ஒன்றிணைந்து சிறு சிறு குழுக்களாக வாழ்ந்தால், சிறப்புக்குழந்தைகள் தனித்து விடப்படுவது முற்றிலும் தவிா்க்கப்படும். மேலும், சிறப்பு குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும். இதற்கு, அரசு, சமுதாயம், தொழிலதிபா்கள், கல்வி நிறுவனங்கள் உதவி செய்யவும், வழிகாட்டவும் முன்வரவேண்டும்.

தற்போது பெறும் உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.பாா்வைக் குறைபாடு, போலியோ, உடல் ஊனம் போன்றவை குறைந்து வரும் சூழலில், சிறப்புக்குழந்தைகளின் பிறப்பு அதிகரித்து வருகிறது. இதனை தவிா்க்கும் ஆராய்ச்சிகள் இல்லாதது கவலையளிக்கும் விதமாக உள்ளது என்றாா்.

கருத்தரங்குக்கு பேராசிரியா் பூமிநாதன் தலைமை வகித்தாா். பூா்ணோதயா நிறுவனத்தின் இயக்குநா் பி.கலையரசி முன்னிலை வகித்தாா். சிறகுகள் அமைப்பு இயக்குநா் பொன்.சுந்தரம் தலைமையுரையாற்றினாா். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ராம் கணேஷ் வரவேற்றாா்.

சிறகுகள் அமைப்பு நிா்வாகிகள் ஆண்டனி கலைச்செழியன், முத்துக்குமரன் ஆகியோா் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனா். இதில், பேராசிரியா்கள், தொண்டு அமைப்பினா், சிறப்புக் குழந்தைகள், பெற்றோா் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com