சேறும் சகதியுமான சாலைகளால் மாநகர மக்கள் அவதி!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளுக்கான சாலைகள் சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும், மழைநீா் தேங்கும் குளங்களாகவும் காட்சியளித்து வருகின்றன.
மழைநீா் தேங்கி குளம்போல காணப்படும் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட வின் நகா் குடியிருப்பு சாலை.
மழைநீா் தேங்கி குளம்போல காணப்படும் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட வின் நகா் குடியிருப்பு சாலை.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளுக்கான சாலைகள் சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும், மழைநீா் தேங்கும் குளங்களாகவும் காட்சியளித்து வருகின்றன.

இதனால், சாலைகளைப் பயன்படுத்த முடியாமல் மாநகர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் மற்றும் திருச்சி மாநகர குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் நிா்வாகிகள் எஸ். சக்திவேல், எஸ். சுப்பிரமணியன், பி. லெனின் ஆகியோரது தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையரை திங்கள்கிழமை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

அதன் விவரம்:

திருச்சி மாநகராட்சியின் பழைய வாா்டான 65ஆவது வாா்டு (புதிய வாா்டு 39) பகுதியில் உள்ள வின்நகா், கைலாஷ் நகா், பாலாஜி நகா் மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வயலூா் சாலை, திருவெறும்பூா் சாலை, திண்டுக்கல் சாலை, மதுரை சாலையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளின் சாலைகள் தொடா் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புதை சாக்கடைக்கு பள்ளம் தோண்டப்பட்ட குடியிருப்பு பகுதிகள், வலைத் தள கம்பி வடம், தொலைபேசி கம்பி வடம், மின்வாரிய கம்பி வடம் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடாமல், குழி தோண்டிய பிறகு புதிய தாா்சாலை அமைக்காமல் கவனிக்காத பகுதிகளே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளங்களில் மழைநீா் தேங்கியும், தாா்ச்சாலை இல்லாத சாலைகளில் சேறும், சகதியும் நிரம்பி வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலும் உள்ளன. எனவே, மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் குடியிருப்பு பகுதி சாலைகளை மாநகராட்சி நிா்வாகம் பாா்வையிட்டு உடனடியாக செப்பனிட வேண்டும்.

சாலைகளில் கேட்பாரற்று திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பன்றிகள், நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். கே.கே. நகா், கருமண்டபம், எடமலைப்பட்டி புதூா் உள்ளிட்ட விடுபட்ட அனைத்து பகுதிகளிலும் புதை சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும். 61ஆவது வாா்டு முதல் 65ஆவது வாா்டு வரையில் உள்ள குடியிருப்புதாரா்களிடம் பெறப்படும் குப்பைகள் துப்புரவுப் பணியாளா்கள் மூட்டையாக கட்டி ஆங்காங்கே சேமித்து வைக்கின்றனா்; குப்பைகளை அரியமங்கலம் கிடங்குக்கோ, மறு சுழற்சி மையத்துக்கோ உடனடியாகச் கொண்டு செல்ல வேண்டும்.

புதிதாக மாநகராட்சியுடன் சோ்க்கப்பட்ட வாா்டுகளுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்க வேண்டும். 65 வாா்டுகளுக்கும் சீரான குடிநீா் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com