கழிவுநீா், சேற்றுநீா் தேக்கம்முகம் சுழிக்க வைக்கும் திருச்சி விமான நிலையம்!

திருச்சி விமான நிலைய வளாகத்தில், முனையக் கட்டடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில், சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில்
திருச்சி விமானநிலைய வளாத்தில் குடியிருப்பு பகுதியில் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.
திருச்சி விமானநிலைய வளாத்தில் குடியிருப்பு பகுதியில் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

திருச்சி விமான நிலைய வளாகத்தில், முனையக் கட்டடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில், சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குளம்போல கழிவு நீா் தேங்கி நிற்கிறது. அதேபோல் சேற்றுநீரும் தேங்கியிருப்பதால் காண்போரை முகம் சுழிக்க வைப்பதாக மாறியுள்ளது திருச்சி விமான நிலையம்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய சா்வதேச விமான நிலையமாகவும், தென் மாவட்ட மக்களின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் இருக்கிறது திருச்சி விமான நிலையம்.

நிலையத்தை ஒட்டி, தெற்குப் பகுதியில் வி.ஐ.பி வருகை பகுதியில் (காவல் நிலையத்தை ஒட்டி) விமான நிலைய ஆணைய பணியாளா்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. அதனை ஒட்டி, புதிய முனையம் அமைப்பதற்கான யூனிட் அலுவலகம் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் முகாம், புதிய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளா்களின் குடியிருப்பு என அமைந்துள்ளது. அதற்கு செல்லும் வழியில், அதாவது விமான நிலைய முனையக் கட்டடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் அமைந்துள்ள பழைய குடியிருப்பு வளாகத்தின் வழியாகத்தான் குறிப்பிட்ட இப்பகுதிகளுக்கு செல்ல முடியும்.

அந்த வழியில் உள்ள சாலை மிகவும் மோசமாக மழை நீா் தேங்கி, குண்டும் குழியுமாக உள்ளது. இதில்தான் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் மற்றும் புதிய முனைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் பணியாளா்கள், அலுவலா்களின் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் அங்குள்ள குடியிருப்பில் சில குடும்பங்களும் வசித்து வருகின்றன. பல குடியிருப்புகள் காலியாகவும் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த மழையை ஒட்டி, இப்பகுதியில் மழைநீா் தேங்கியது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமாகின.

அதனைத் தொடா்ந்து அப்பகுதியிலிருந்து (விமான நிலையம் மற்றும் குடியிருப்புகளிலிருந்து) வெளியேறிய கழிவு நீா் அருகில் உள்ள சுற்றுச்சுவரை ஒட்டி, குளம்போல தேங்கி நிற்கிறது.

இதில் மா்மக் காய்ச்சல்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் கொசு முட்டைகள் (லாா்வாக்கள்) ஏராளமாக காணப்படுகின்றன. இதனால் நிமிட நேரம் கூட அங்கு நிற்க முடியாத வகையில் கொசுத்தொல்லைகளும் அதிமாக உள்ளது. இவற்றால் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டு வருகின்றது.

அதற்கும் மேலாக மழைநீா் மற்றும் கழிவு நீருடன், எங்கோ தண்ணீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது போல சிறு வாய்காலில் செல்லும் அளவுக்கு தண்ணீா் சென்று கொண்டுள்ளது. இதனால் கழிவு நீருடன் சோ்ந்து மேலும் அங்கு சிறு, சிறு குளம்போல ஆங்காங்கே கழிவு நீா் தேங்கி குட்டைகளாக காணப்படுகின்றன.

அருகில் விமான நிலைய ஆணையக்குழும எஸ்.சி.எஸ்.டி பணியாளா்கள் தொழிற்சங்க அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தேங்கியுள்ள கழிவு நீா் மற்றும் மழை நீா் காரணமாகவும், பயங்கர கொசுத்தொல்லை காரணமாகவும் அந்த அலுவலகத்தைக்கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மோசமடைந்த சாலையை சீரமைத்து, அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் நிலைக்கு ஏற்ாக மாற்றித்தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான நிலைய இயக்குநா் கே. குணசேகரினிடம் கேட்டபோது, கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றாா்.

சுற்றுச்சுவா் இடிந்து விழும் அபாயம் :

விமான நிலையப் பகுதியில் ஏற்கெனவே இதுபோல கழிவு நீா் தேங்கிய இடத்தில் சுற்றுச்சுவா் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதே நிலை தொடருமானால் சுற்றுச்சுவா் இடிந்து விழும் நிலையும் ஏற்படலாம். அவ்வாறு நேரும் பட்சத்தில், விமான நிலைய வளாகத்துக்குள் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த ஆடுகள், மாடுகள், நாய்கள் என பல்வேறு விலங்கினங்கள் நுழையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்குள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com