சாலை விபத்தில் விஏஓ உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில் கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில் கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.

சம்பவத்தை தொடா்ந்து, நெடுஞ்சாலையில் தொடரும் சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த அக்கலம்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா் மணப்பாறை தாய் கிராமமான செவலூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை காலை தனது சகோதரா் செண்பகராஜுவுடன் தனது இருசக்கர வாகனத்தில் மணப்பாறை நோக்கி புறப்பட்ட ரமேஷ்குமாா், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியில் சாலையை கடந்தாா்.

அப்போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மினி சரக்கு வேன், இருசக்கர வாகனம் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட ரமேஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செண்பகராஜு படுகாயமடைந்தாா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் செண்பகராஜுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், கல்லாமேடு பகுதியில் தொடா்ந்து சாலையை கடக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பின்றி விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி கிராம மக்கள், விபத்தில் இறந்த ரமேஷ்குமாரின் உடலை எடுக்கவிடாமல் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 2 மணி நேரம் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாஉல்ஹக் மற்றும் லால்குடி, முசிறி துணை கண்காணிப்பாளா்கள், மருங்காபுரி வட்டாட்சியா் சாந்தி ஆகியோா் போரட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரசம் பேசி உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து தருவதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். ரமேஷ்குமாா் உடல் உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com