"சமூகத்தை கட்டமைக்க தலைமைத்துவ பண்பு அவசியம்'

சமூகத்தை கட்டமைப்பதில் உயர்கல்வித்துறையில் உள்ளோருக்கு தலைமைத்துவ பண்பு அவசியமானது என

சமூகத்தை கட்டமைப்பதில் உயர்கல்வித்துறையில் உள்ளோருக்கு தலைமைத்துவ பண்பு அவசியமானது என மத்திய அரசின் மனிதவளத்துறை (உயர்கல்வி) செயலர் ஆர். சுப்ரமணியம் வலியுறுத்தினார்.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி), மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஎம்), தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) ஆகியவற்றில் பல்வேறு துறைகளுக்கான முதன்மையர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 23 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம், தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் இரண்டு வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா, திருச்சி தேசிய தொழிலநுட்பக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனை காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்து மத்திய அரசின் மனிதவளத்துறை செயலர் ஆர். சுப்ரமணியம் பேசியது: அறிவார்ந்த சமூகத்தை கட்டமைப்பதில் உயர்கல்வித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. உயர்கல்வித்துறையில் உயர்ந்த பொறுப்புகளுக்கு நியமனம் செய்யப்படும் பேராசிரியர்களுக்கு தலைமைத்துவ பண்புகள் அவசியமானது. பாடம் கற்றுத்தருவதுடன் பேராசிரியர்களின் பணி நின்றுவிடுவதில்லை. எதிர்கால தலைமுறையை நல்வழிப்படுத்துவதுடன், சமூகத்துக்கு பயன்தரும் சிறந்த குடிமகனாக உருவாக்க வேண்டும். அதற்கு நிர்வாகத் திறன், வழிநடத்தும் திறன், தலைமைத்துவம், தனித்திறன் உள்ளிட்டவை அவசியமானது என்றார்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், ஸ்ரீநகரில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் கணேசன் கண்ணபிரான், குவாஹாட்டியில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்பக் கழக இயக்குநர் கௌதம் பருவா ஆகியோர் பயிற்சி வகுப்பின் நோக்கங்கள் மற்றும் அவசியங்கள் குறித்து விளக்கிப் பேசினர். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒருவாரம் பயிற்சி முடித்து, ஸ்ரீரங்கத்தில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு வாரம் பயிற்சி பெறுவர். பின்னர், சிங்கப்பூர் சென்று அங்குள்ள பல்கலைக் கழகத்திலும் ஒருவாரம் பயிற்சி பெறுவர். பிப்.23ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் கல்வியாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி குழுவினர் (லீப்) செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com