மதவாத சக்திகளை தமிழகத்தில் நுழையவிட மாட்டோம் 

மதச் சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகளை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

மதச் சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகளை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் என்னும் தலைப்பில் அவர் பேசியது:
இஸ்லாமிய புலவர்கள் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் அளித்த அருள்கொடை அளவிட முடியாது. இஸ்லாமிய இலக்கியங்களில் கிசா, முனாசாத்து, நாமா, படைப்போர், மசலா உள்ளிட்டவை ஒவ்வொன்றும் சிறப்புக்குரியவை. நபிகள் நாயகத்தின் வரலாற்றை பறைசாற்றும் சீறாப்புராணம் எழுதிய உமறுபுலவர் 18ஆம் நூற்றாண்டின் சிறந்து விளங்கிய இலக்கியவாதி என்பதை மறுப்பதற்கில்லை. 20ஆம் நூற்றாண்டிலும் யாப்பு கவிதை, புதுக்கவிதைகள் படைத்து தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியர்கள் பெருமை சேர்த்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அதற்குப் பிறகும் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு தமிழகம் முன்னோடி. இத்தகைய தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை. மத சார்பின்மையைச் சிதைக்கும் சக்திகளை தமிழகத்தில் எந்த வடிவிலும் நுழைய விட மாட்டோம். தமிழினத்துக்காகவும், தமிழக நலனுக்காகவும், ஜனநாயகம் காக்கவும் போராளியாக செயல்படுவேன். தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டேன். தோல்விதான் நான் ஈட்டிய பணம். அதைக் கொண்டு வெற்றியை வாங்கி விடலாம். இதனை நான் அரசியலாக சொல்லவில்லை. 
மீத்தேன், முல்லைப்பெரியாறு, காவிரி விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை, மது ஒழிப்பு உள்ளிட்டவற்றில் தமிழர்களுக்கும், தமிழக நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.களங்களை இழக்க நேரிடலாம், யுத்தங்களைத் தொடருவோம். வைணவம், சைவம்,  கிறித்துவம், இஸ்லாம் என அனைத்தையும் மதிப்பவன்.
மத சம்பிரதாயங்களில் மூக்கை நுழைக்கும் நடவடிக்கையோ, கையை நுழைக்கும் நடவடிக்கையோ தென்பட்டால் அவை  அறுந்துபோகும்.  சமூக ஒற்றுமையைக் காக்கவும், தமிழைக் காக்கவும் இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக 18 முதல் 20 வயதுடைய மாணவப் பருவத்தில் உள்ள இளைஞர்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியின் தீரத்தையும், வீரத்தையும் அறிந்து அதன்வழி நடந்திட வேண்டும் என்றார்.
கண்ணீர் சிந்திய வைகோ: முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் பகுதியில் நடந்த மகாத்மாகாந்தி உருவபொம்மை அவமதிப்பு சம்பவத்தை விவரித்து பேசுகையில் மேடையிலேயே கண்ணீர் சிந்தினார் வைகோ. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கல்லூரியின் முதுகலை தமிழாய்வுத்துறை, இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் ஆகியவை இணைந்து இந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வை நடத்தின. கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். தமிழாய்வுத் துறைத் தலைவர் அ. சையத் ஜாகீர் ஹசன் வரவேற்றார். கல்லூரிச் செயலர் காஜா நஜீமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, தலைவர் ஜமால் முகமது பிலால், துணைச் செயலர் அப்துல் சமது, ஆய்வு மைய இயக்குநர் ராஜா முகமது,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், முனைவர்கள் முகமது இப்ராஹீம், சிராஜூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com