சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி
By DIN | Published On : 14th February 2019 08:49 AM | Last Updated : 14th February 2019 08:49 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், முசிறியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையின் மையத்தடுப்பில் மோதி லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் கொண்ட பவுடர்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி-சேலம் புறவழிச்சாலையில் சென்ற போது சாலையின் மையத்தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
தகவலறிந்து வந்த முசிறிபோலீஸார், சுமார் 7 மணி நேர முயற்சிக்குப் பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
முசிறி- துறையூர் சாலையில் பூங்கா பகுதியிலிருந்து திருச்சி- சேலம் புறவழிச்சாலைப் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 50 செ.மீ. உயரத்தில் மையத்தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால் இதற்கான எந்தவித அறிவிப்புப் பலகைகள் எங்கும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாகஇரவு நேரங்களில் விபத்துகள் நிகழ்வது தொடர்ந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு லாரி கவிழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.