மனைவி தற்கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 20th February 2019 09:10 AM | Last Updated : 20th February 2019 09:10 AM | அ+அ அ- |

வரதட்சணைக் கொடுமையால் மனைவி தூக்கிட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் செல்வகணபதி(37). இவருக்கும் ராஜலட்சுமி(29) என்பவருக்கும் கடந்த 12.2.2012 ஆம் தேதி திருமணம் நடந்தது. அதன்பிறகு வரதட்சணைக் கேட்டு ராஜலட்சுமியை செல்வகணபதி குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ராஜலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸார் கணவர் செல்வகணபதி, அவரது தாயார் கோமதி, சகோதரர் சுப்பிரமணியன், சகோதரனின் மனைவி ருக்குமணி ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி.மகிழேந்தி செவ்வாய்க்கிழமை செல்வகணபதிக்கு ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.