முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தாய்-சேய் நலனுக்காக மேலும் புதிய ஊர்தி: மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது
By DIN | Published On : 28th February 2019 10:53 AM | Last Updated : 28th February 2019 10:53 AM | அ+அ அ- |

தாய்-சேய் வாகன சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்துக்கு கூடுதலாக ரூ. 8.68 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை அவர்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், ஒரு வயதுக்குள்பட்ட உடல்நலம் குன்றிய குழந்தைகளை சிகிச்சை முடிவடைந்த பிறகு வீட்டுக்கு அழைத்துச் செல்லவும் 102 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்து.
திருச்சி மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு இத் திட்டம் கொண்டுவரப்பட்டு முதல்கட்டமாக ஒரு ஊர்தி மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
பின்னர், மேலும் 4 ஊர்திகள் பெறப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 ஊர்திகளும், திருவரங்கம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு தலா ஒரு ஊர்தி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மேலும், இரு ஊர்திகள் பெறப்பட்டு துவரங்குறிச்சி, முசிறி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாய்-சேய் விழுக்காட்டில் 100 சதவீதம் இந்த சேவையை பயன்படுத்துவதால் கூடுதலாக ஒரு ஊர்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்த புதிய ஊர்தி சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்வு திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆட்சியர் சு. சிவராசு தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோர் ஊர்தி சேவையை தொடக்கி வைத்தனர். இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சம்சாத்பேகம் கூறியது: இந்த புதிய ஊர்தியுடன் திருச்சி மாவட்டத்துக்கு 8 தாய்-சேய் ஊர்திகள் கிடைத்துள்ளன. செஞ்சிலுவை சங்கம் மூலம் இந்த ஊர்திகள் பராமரிக்கப்படுகின்றன. ஓட்டுநர்களையும் செஞ்சிலுவை சங்கத்தினரே நியமனம் செய்கின்றனர். இந்த ஊர்தி மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் போல இல்லாதிருப்பதால் பொதுமக்களிடையே எந்தவித தயக்கமும் இல்லை. ஆர்வத்துடன் பயணம் செய்ய விரும்புகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் முழுமையாக இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.