சுடச்சுட

  

  திருச்சி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 5 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
  இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
  பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு முறையான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் கிராமங்கள்தோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல, இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி பல தரப்பிலும் மனுக்கள் வரப்பெற்றுள்ளன. ஜனவரி மாதம் மட்டும் 5 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
  இதன்படி, திருவெறும்பூர் வட்டத்துக்குள்பட்ட சூரியூரில் ஜன.16ஆம் தேதி,  ஜன.17இல் மருங்காபுரி வட்டம், ஆவாரங்காட்டிலும், மணப்பாறை வட்டம், பொத்தமேட்டுப்பட்டியிலும் நடைபெறுகிறது. ஜன.20ஆம் தேதி அணைக்கரைப்பட்டியிலும், ஜன.27ஆம் தேதி கருங்குளத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டதில் ஒரு இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு 5 இடங்களுக்கு அனுமதியளித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
  பிப்ரவரி மாதம் 6 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இந்த மனுக்கள் அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு மனுக்கள் வந்தால் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்றார் ஆட்சியர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai