சுடச்சுட

  

  தமிழக பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை 30% பங்களிப்பு: வீட்டுவசதி துறை முதன்மைச் செயலர் பேச்சு

  By DIN  |   Published on : 12th January 2019 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை 30 சதம் பங்களிப்பு அளிப்பதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.
  இந்திய அடுக்குமாடி கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பின் (கிரடாய்) திருச்சி கிளை சார்பில், மூன்று நாள் வீடுகள் விற்பனை கண்காட்சி திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
  தமிழகத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக கட்டுமானத் துறை அமைந்துள்ளது. அனைவருக்கும் நியாயமான விலையில் வீடுகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 800 நிறுவனங்களின் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, திருச்சியிலிருந்து பெறப்பட்ட 16 விண்ணப்பங்களில் 15 நிறுவனத் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
  கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடுகள், கட்டடங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை குறைப்பது என்பதில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது. மாநில அரசுகளும், மத்திய அரசின் அலுவலர்களும் இணைந்து முடிவெடுத்து கவுன்சிலிடம் முறையிட்டால் மட்டுமே சாத்தியமாகும் என்றார்.
  கிரடாய் அமைப்பின் திருச்சி கிளைத் தலைவர் எஸ். ஆனந்த் கூறியது: 21-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் உள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் ஜிஎஸ்டி இல்லாமல் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும்.
  பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு ரூ.2.50 லட்சம் மானியத்துடன் கூடிய வீடுகளை கட்டித்தரவும் ஏற்பாடுகள் செய்யப்படும். வீடுகளை வாங்குவதற்கு வசதியாக கண்காட்சி இடத்திலேயே 7 வங்கிகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. வீட்டுக் கடன்களுக்கு 8.90 சத வட்டியில் கடன்கள் ஏற்பாடு செய்துதரப்படும். ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் கண்காட்சியானது தினமும் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும் என்றார் அவர்.
  கண்காட்சி மலரை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் வெளியிட, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், தமிழக கிரடாயின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள வி. கௌதமன், கண்காட்சி தலைவர் ஐ. ஷாஜகான், செயலர் ஏ. நஸ்ருதீன், பொருளாளர் எஸ். மோகன், துணைத் தலைவர் பி. பிரபாகர், கிரடாய் செயலர் சி. சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், வங்கியாளர்கள், நிதி நிறுவன அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai