பெல் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றம்

திருச்சி, திருவெறும்பூர் பெல் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த  புத்தர் சிலையை வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

திருச்சி, திருவெறும்பூர் பெல் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த  புத்தர் சிலையை வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
திருவெறும்பூர் பெல் நிர்வாக குடியிருப்பு வளாகத்தில்  டிசம்பர் 29 ஆம் தேதி நள்ளிரவு, மகாபோதி பௌத்த சங்கத்தினர் அதன் பொது செயலாளர்  தேவேந்திரன் தலைமையில் மூன்றரை  அடி உயரமுள்ள புத்தர் சிலையை நிறுவினர். பின்னர், 30 ஆம் தேதி முதல் அந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தகவலறிந்த  பெல் நிர்வாகம்  ஜனவரி 3-ஆம் தேதி, போலீஸார் உதவியுடன் அந்த புத்தர் சிலையை அங்கிருந்து  அகற்றி எடுத்து சென்றனர்.
இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மகாபோதி பௌத்த சங்கத்தினருடன் இணைந்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி பெல் நிர்வாகத்திடம் மகாபோதி பௌத்த சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பெல் வளாகத்தில் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் சிலையை மீண்டும் வழங்கினர். இதனையடுத்து பெல் கணேசபுரம் உய்யகொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஜன. 9ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் புத்தர் சிலையை மீண்டும் நிறுவினர். அத்தோடு பெல் நிர்வாகத்துக்கு சொந்தமான மதில்சுவரையும் ஜேசிபி இயந்திரத்தை வைத்து உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  நீர் ஆதாரத்துறை எஸ்.டி.ஓ. கண்ணன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீஸார், வட்டாட்சியர் அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை புத்தர் சிலையை மீண்டும் அகற்றினர். இதற்கு,  மகாபோதி பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவரும்  , பெல் மனிதவளத்துறை துணைப்பொது மேலாளருமான  சிவக்குமார்(50) மற்றும் பெல் ஊழியர்கள் விஜயகாந்த்(38), தமிழ்தாசன்(33), தேவேந்திரன்(36), அபயகுமார்வசந்த்(43) செல்வன்(53),  
விஜயகுமார்(33), அறிவுமணி(37) மற்றும் ஓய்வு பெற்ற பெல் ஊழியர்கள் தங்கசாமி(64), ஆறுமுகம்(67) அகியோர் எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முயன்றனர்.  இதனையடுத்து  10 பேரையும் திருவெறும்பூர் போலீஸார் கைது செய்து விசாரனை செய்தனர். அப்புறப்படுத்தப்பட்ட  சிலை  திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com