சுடச்சுட

  


  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிதிச் சந்தை தொடர்பான இருநாள் சர்வதேசக் கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது. இதில், கல்வியாளர்கள் 5 பேருக்கு துணை வேந்தர் விருதுகள் வழங்கி கௌரவித்தார். 
  பல்கலையின் குளிர்மை அரங்கில் நிதிச்சந்தைகளின் முன்னேற்றங்களும், சவால்களும் என்ற தலைப்பிலான இருநாள் சர்வதேச கருத்தரங்கம் சனிக்கிவமை தொடங்கியது. 
  விழாவுக்கு பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் முனைவர் பி.மணிசங்கர் தலைமை வகித்து, கல்வியாளர்கள் 5 பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் கருத்தரங்கம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டுப் பேசினார்.
  விழாவில், அமெரிக்க சாம் ஹோஸ்டன் பல்கலை. பேராசிரியர் பாலசுந்தரமணியம் அந்நிய முதலீடுகளில் அமெரிக்க சந்தையின் போட்டி தன்மை எனும் தலைப்பிலும், மலேசியாவைச் சேர்ந்த யுனிவர்சிட்டி டெக்னோலகி மாரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதா சுப்பிரமணியம் மலேசியாவில் நிதி மேலாண்மை என்ற தலைப்பிலும் பேசினர். அமெரிக்காவில் கலிபோர்னியா புனித மரியன்னை கல்லூரியின் பேராசிரியர் சங்கரன் வெங்கடேசுவர் இந்தியப் பொருளாதாரத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் பாதிப்புகள் என்ற தலைப்பில் பேசினார். 
  பாரதிதாசன் பல்கலையின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வி. நித்யா வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கத்தின் இயக்குநரும், சுமார்ட் மேலாண்மை கல்வி இதழின் வெளியீட்டாளருமான முனைவர் மு.செல்வம் வரவேற்றுப் பேசினார். ஞாயிற்றுக்கிழமையுடன் கருத்தரங்கம் நிறைவுபெறுகிறது. 
  ஏற்பாடுகளை பாரதிதாசன் பல்கலையின் வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் துறையின் தலைவர் மு.செல்வம், ஒருங்கிணைப்பாளர் ஜெ.காயத்ரி, உதவி பேராசிரியர்கள் செ.வனிதா, ம.பாபு ஆகியோரும் செய்திருந்தனர். 
  கல்வியாளர்களுக்கு விருது
  விழாவில், ஈரான் இஸ்லாமிக் ஆசாத் பல்கலையின் துணைவேந்தர் முனைவர் ஹமீதுசரிமீ, பொருளாதார வல்லுநர் ஜெபமாலை வினன்சி ஆராய்ச்சி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, கொல்கத்தாவில் உள்ள மூத்த பேராசிரியர் முனைவர் அர்னப் குமார் மெய்டிக்கு இளம் மேலாண்மை அறிவியலாளர் விருது, மாலத்தீவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெ.கிருபாகரனுக்கு பல்கலையின் சிறந்த முன்னாள் மாணவர் விருது மற்றும் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தமைக்காக பெங்களூரு ரேவா பல்கலையின் ஆராய்ச்சியாளர் சைலஜா, ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஏ. விஜயகுமார் ஆகியோருக்கு பல்கலைக் கழக துணை வேந்தர் பி. மணிசங்கர் விருதுகளை வழங்கினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai