சுடச்சுட

  


  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள், செங்கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனை திருச்சியில் சனிக்கிழமை களைகட்டியது.
  விவசாயத்துக்கு ஆதாரமாக, தமிழர்களின் முக்கிய திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் எனக் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒருமாதம் முன்பிருந்தே மக்கள் தயாராகி வருகின்றனர்.
  நாகரிக வளர்ச்சியின் காரணமாக சில்வர், பித்தளை போன்ற உலோகங்களில் பொங்கல் பானைகள் விற்பனைக்கு கொண்டு வந்தாலும், கிராமங்களில் இன்றளவும் பாரம்பரியமாக மண் பானைகளையே பயன்படுத்தி வருகின்றனர். கிராமங்களில் மட்டுமில்லாமல், நகரங்களிலும் பெரும்பாலானவர்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பொங்கலுக்கு செங்கரும்பு, பானைகளில் மஞ்சள்கொத்து கட்டி வழிபடுவது வழக்கம்.
  இதனால், செங்கரும்பு, பானை, மஞ்சள் கொத்து விற்பனை ஆண்டுதோறும் பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பே களை கட்டத் தொடங்கும். நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கரும்பு, பொங்கல் பானைகள், மஞ்சள் கொத்து மற்றும் பூளைப்பூ விற்பனையும் சூடுபிடித்துள்ளது. திருச்சி காந்தி மார்கெட், உறையூர், தென்னூர் உழவர் சந்தை, தில்லை நகர் சாஸ்திரி சாலை, ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட், மெயின்கார்டுகேட், சத்திரம் பேருந்து நிலையம் பின்புறச் சாலை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை ஆகிய இடங்களில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியிருந்தது. இந்தப்பகுதிகளில் கரும்பு, பானை, மஞ்சள் கொத்து விற்பனைக்காக தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
  பொங்கல் பானைகள் குறைந்தபட்சம், 50 முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. செங்கரும்பு ஜோடி, ரூ. 30 முதல் ரூ. 50 வரை அதன் உயரம், பருமன், நிறத்துக்கு தகுந்தபடி விலை இருந்தது. 
  மஞ்சள் கொத்து ரூ. 15 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்டது.காப்பு கட்டுவதற்கு தேவையான கூரைப்பூ, ஆவாரம்பூ மற்றும் வேப்பிலை அடங்கியவை ஒரு கொத்து ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
  பொங்கலுக்கான வெல்லம் கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai