4,870 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சியில் 17 பள்ளிகளைச் சேர்ந்த 4,870 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள்


திருச்சியில் 17 பள்ளிகளைச் சேர்ந்த 4,870 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் வழங்கினர்.
இதற்கான விழா டவுன்ஹால் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, செம்பட்டி ஆபட் மார்ஷல் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
டவுன்ஹால் பள்ளியில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 1,759 மாணவ, மாணவிகளுக்கும், மார்ஷல் மேல்நிலைப் பள்ளியில் 9 பள்ளிகளைச் சேர்ந்த 3,111 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:
இந்தியாவிலேயே முன்னோடியாக உள்ள துறையாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைந்தள்ளது. எனவேதான், தமிழக அரசானது ஆண்டுக்கு ரூ.27,500 கோடியை பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கி வருகிறது. பள்ளிக் கல்வியை சிறப்பாக முடித்தால்தான் உயர்கல்வியை நன்றாக அமைத்துக் கொள்ள முடியும். உயர்கல்வி சிறப்பாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். இதன்காரணமாக மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற மாணவிகள் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல அச்சப்பட்டு இடைநிற்க கூடாது என்பதாலேயே விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், கிராமப்புற மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி பேசியது: மாணவர்களின் உயர்கல்வியில் அக்கறை கொண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளியை உருவாக்கித் தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலிலதா. இதுமட்டுமல்லாது, மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவற்றை அமைத்து கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஜெயலலிதா. இந்த வாய்ப்புகளை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.ராமகிருட்டிணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com