தற்காலிக பேருந்து நிலையங்களால் அவதியுறும் மக்கள்

திருச்சியில் பண்டிகை காலங்களில் ஏற்படுத்தப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். 

திருச்சியில் பண்டிகை காலங்களில் ஏற்படுத்தப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். 
திருச்சி பழமையான மாநகராட்சியாக இருந்தாலும், அதன்பின்னர் மாநகராட்சி அந்தஸ்து பெற்ற நகரங்கள் கூட சந்திக்காத போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகளை அடிக்கடி நிகழ்கிறது. இதில், ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் மன்னார்புரத்தில் புதுக்கோட்டை, மதுரை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கும்,  மத்திய பேருந்துநிலையம் அருகே சோனா மீனா திரையரங்கு அருகில் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கும் தற்காலிக பேருந்துநிலையங்கள் அண்மை காலமாக அமைக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகளை பிடிக்க வருவோர் நகரப் பேருந்துகளில் மத்திய பேருந்து நிலையம் வந்து தங்களது உடைமைகள், குழந்தைகளுடன்  நடந்து  செல்லவேண்டியுள்ளது. மேலும் ஆட்டோவில் ஏறினால் குறைந்த தொலைவானாலும் வாடகை அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக,  மதுரையிலிருந்து வரும் பயணிகள் தஞ்சை பேருந்துக்கு செல்ல வேண்டுமெனில், மன்னார்புரத்தில் இறங்கி, அங்கிருந்து நகரப்பேருந்து பிடித்து மத்திய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து நடந்து  தஞ்சை பேருந்து நிலையத்துக்கு செல்லவேண்டும். இதே நிலைதான் அனைத்து தற்காலிக பேருந்துநிலையங்கள் செல்வதற்கும் ஏற்படுகிறது.
இதனால் நேரம், பணம் வீணாவதுடன் முதியோர் பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களை ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என்பதுதான் பயணிகளின் கோரிக்கை.
ஆறுதல் தரும் ஆம்னி பேருந்து நிலையம்: மத்திய பேருந்துநிலையம் அருகே தனியார் இடத்தை குத்தகைக்கு எடுத்து அமைத்துள்ள ஆம்னி பேருந்து நிலையத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியையும்  போக்கியுள்ளது பயணிகளுக்கு சற்று ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com