திருச்சியில் தமிழக காவல்துறை இயக்குநர் ஆய்வு
By DIN | Published On : 08th July 2019 08:14 AM | Last Updated : 08th July 2019 08:14 AM | அ+அ அ- |

திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல்துறை இயக்குநர் (சட்டம் -ஒழுங்கு) ஜே.கே. திரிபாதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூரில் ஆய்வு முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு திருச்சி வந்த திரிபாதி, கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள ஆபீசர்ஸ் கிளப்பில் திங்கினார்.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஜே.கே. திரிபாதி ஆய்வு மேற்கொண்டார். மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் வி.வரதராஜு, மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், சரக காவல்துறைத் துணைத் தலைவர்கள் திருச்சி கே. பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் லோகநாதன், மாநகரக் காவல் துணை ஆணையர்கள் நிஷா, ஆ. மயில்வாகனன், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள், போராட்டங்கள், மணல் கடத்தல் பிரச்னை போன்றவை குறித்து அதிகாரிகளுடன் காவல்துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதி ஆலோசனை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.