திருச்சியில் தேநீரக உரிமையாளர் அடித்துக் கொலை
By DIN | Published On : 08th July 2019 08:12 AM | Last Updated : 08th July 2019 08:12 AM | அ+அ அ- |

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், தேநீரக உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பொன்மலைப்பட்டி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (44). இவர் பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேநீரகம் நடத்தி வந்தார். சனிக்கிழமை இரவு வியாபாரம் முடித்த பின்னர் கடையை பூட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையுடன் அங்கு வந்த மே.க.கோட்டை பிரபாகரன் (34) கடையை மீண்டும் திறக்குமாறு வலியுறுத்தினாராம். இதற்கு சோமசுந்தரம் மறுப்புத் தெரிவித்தாராம். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்த கட்டையால் சோமசுந்தரத்தை பிரபாகரன் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த சோமசுந்தரம், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீஸார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக இருந்த பிரபாகரனை கைது செய்தனர்.