நீட்ஸ் திட்டத்தில் ரூ.5 கோடி வரை தொழில் கடன்

திருச்சி மாவட்டத்தில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரையில் மானிய உதவியுடன் கடன் வழங்கப்படுவதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரையில் மானிய உதவியுடன் கடன் வழங்கப்படுவதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில்கள் தொடங்க தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத் தரப்படும். இந்தத் திட்டத்தை மாவட்டத் தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்தி வருகிறன. இதன் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களைத் தொடங்கலாம். அதற்கென்று அரசு 30 சதவீத மானியமும், 3 சதவீத பின்முறை வட்டி மானியமும் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். இதில் பொதுப்பிரிவினருக்கு 35 வயதும், சிறப்புப் பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்) 45 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட்ஸ் திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சக் கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வருமான வரம்பு எதுவும் கிடையாது. உரிமையாளர் நிறுவனங்களும், பங்குதாரர் நிறுவனங்களும் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
விருப்பமுள்ளோர்  ‌w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌n‌e‌e‌d‌s என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு பரிசீலித்து வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். கடன் அனுமதி வழங்கப்பட்ட பிறகு ஒரு வாரம் கட்டாய மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலைகள், கயிறு பொருள்கள் உற்பத்தி, வாழையிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருள் உற்பத்தி, இரும்பு, மர அறைகலன்கள் உற்பத்தி, உள்ளிட்ட தொழில்களை இரு பாலரும் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில், நீட்ஸ் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 17 தொழில்களை தேர்வு செய்யலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com