தேசிய வாழை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானிக்கு லால்பகதூர் சாஸ்திரி விருது
By DIN | Published On : 19th July 2019 04:55 AM | Last Updated : 19th July 2019 04:55 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் (என்ஆர்சிபி) மூத்த விஞ்ஞானி பி. சுரேஷ்குமாருக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் உயரிய விருதான லால்பகதூர் சாஸ்திரி இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் தோட்டக்கலைத்துறையில் இந்த விருது பெற்ற முதல் விஞ்ஞானி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் அர்ப்பணிப்புகளுக்காக சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐசிஏஆர்) மூலம் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் 91ஆவது நிறுவன நாள் விழாவும், விருதுகள் வழங்கும் விழாவும் இணைந்து புதுதில்லியில் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. இந்த விழாவில், திருச்சி தாயனூரில் உள்ள என்ஆர்சிபி-யில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானியான பி. சுரேஷ்குமார், லால்பகதூர் சாஸ்திரி சிறந்த இளம் விஞ்ஞானி என்ற விருதை பெற்றார்.
தோட்டக்கலை ஆராய்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காகவும், வாழை ஆராய்ச்சியில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, அடுத்த மூன்றாண்டுகளுக்கு வாழை ஆராய்ச்சியில் சவால் திட்டங்களை செயல்படுத்த ரூ.30 லட்சம், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வெளிநாடுகளுக்கு சென்றுவர ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ. 36 லட்சம் மதிப்புடையது.