Enable Javscript for better performance
பாடத் திட்டத்தைத் தாண்டி மாணவர்களை வாசிக்க வைப்பதுதான் சரியான கல்வி- Dinamani

சுடச்சுட

    

    பாடத் திட்டத்தைத் தாண்டி மாணவர்களை வாசிக்க வைப்பதுதான் சரியான கல்வி

    By DIN  |   Published on : 25th July 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாடத்திட்டம் தாண்டி மாணவர்களை பல புத்தகங்களை வாசிக்க, சுயமாக சிந்திக்க மற்றும் சிந்தித்ததை தாமாக எழுத எழுத்துப் பயிற்சி வழங்குவதே சரியான கல்வியாகும் என்றார் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்.
    திருச்சி எஸ்.ஆர்.வி.பப்ளிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற அறிஞர் சபைத் தொடக்க விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
    குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுக்கொடுக்கவில்லை, குழந்தைகளிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்ற அடிப்படையில் ஆசிரியர்களின் பணி இருக்கவேண்டும். பாடத்திட்டத்தைத் தாண்டி, மாணவர்களை பல புத்தகங்களை வாசிக்க வைப்பதும், சுயமாக சிந்திக்க வைப்பதும் சிந்தித்ததை தாமாக எழுத எழுத்துப்பயிற்சி வழங்குவதுமே சரியான கல்வியாக இருக்க முடியும். அருகிலுள்ள நூலகங்கள், கோயில் கல்வெட்டுகள் போன்றவற்றை மாணவர்கள் கண்டு ஆய்வு செய்யவும் வேண்டும்.
    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி: குழந்தைகளிடம் கதை சொல்லுதல், குழந்தைகள் கதை கேட்டல், கதை படித்தல் போன்றவைகளின் காரணமாக அவர்களிடம்  கற்பனை வளம் அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகள் வரலாற்று அறிவியல் கதைகளை வாசிப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
    சூழலியலாளர்  ச.முகமது அலி: இயற்கை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இங்குள்ள புல், செடி, கொடி, பறவை, மீன், பாம்புகள், யானை, குயில், விலங்குகள் வானம், பூமி, காற்று, மழை என்று அதன் தனித்தன்மையை இயல்பை மாணவர்களுக்கு கற்றுத்தருதல் வேண்டும்.
    எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி: அறிவியலை நேசிக்க வைப்பது, அறிவியல் சார்ந்த கேள்விகளை கேட்க வைப்பது, அறிவியல் சார்ந்த ஆவணப் படங்களை பார்க்க வைப்பது போன்ற பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். உயிரற்றவை பற்றிய அறிவியலையும், உயிருள்ளவை  பற்றிய அறிவியலையும் புரிந்து கொள்ளுதலை கற்றுத்தருதல் வேண்டும். 
    கணிதமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உழவுத்தொழிலில் அறிவியல் பயன்படுத்தும் முறை பற்றி மாணவர்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
    எழுத்தாளர் ஏ.எஸ்.பத்மாவதி: குழந்தைகள் மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் கல்வியின் நோக்கமாக இருக்க முடியாது, வாழ்க்கையை விழுமியங்கள் சார்ந்து வாழ வேண்டும்.
    வாழ்க்கைத்திறன்கள், வாழ்வில் நன்மை, தீமைகளை எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்தல், உடல் மன வளத்தினை அதிகப்படுத்துதல் போன்றவையும் தேவை என்றார்.
    விழாவில் பள்ளித்தலைவர் எ.ராமசாமி, செயலர் பி.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.செல்வராஜன், துணைத்தலைவர் எம்.குமரவேல், இணைச்செயலர் பி.சத்யமூர்த்தி பள்ளி தலைமை செயல் அலுவலர் க.துளசிதாசன், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai