முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
நிபந்தனையின்றி நீரா பானம் இறக்க அனுமதிக்க வேண்டும்
By DIN | Published On : 30th July 2019 09:56 AM | Last Updated : 30th July 2019 09:56 AM | அ+அ அ- |

நிபந்தனையின்றி நீரா பானம் இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி.
திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
போதிய மழையின்மை மற்றும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் நிலத்தடி நீர் மூலம் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயம் செய்வது என்பது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விட பேராபத்தை விளைவிக்கும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாத பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் வழங்குவது போல்,லிட்டருக்கு ரூ. 6 ஊக்கதொகை வழங்கி பசும்பாலுக்கு ரூ.40, எருமைப்பாலுக்கு ரூ. 50 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்.
2017- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நீரா பானம் இறக்கும் திட்டத்துக்கு உள்ள நிபந்தனையை திரும்பப் பெற்றால் மட்டுமே அத்திட்டம் வெற்றி பெறும். பனை, தென்னை பொருள்கள் மீது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால், மரம் ஏறும் தொழிலில் அழிந்து வருவதால்,வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மரம் ஏறும் பயிற்சி அளித்து,அதற்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்.
2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது கலைக்கப்பட்ட பனை தொழிலாளர்கள் நலவாரியம், தென்னை விவசாயிகள் நலவாரியத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். மாநில அரசு மதுவுக்கான பூரண மதுவிலக்கை கொண்டு வந்து பனை, தென்னை மரங்களில் தயாரிக்கப்படும் மதுவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின் போது, கீழ்பவானி எல் 9 பாசன சங்கச் செயலர் கே.வி.பழனிச்சாமி, மக்கள் மன்றம் அமைப்பாளர் எம். செல்லப்பன், தென்னக நதிகள் மக்கள் இயக்கம் தலைவர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.