முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பிரதமருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் இயக்கம் தொடக்கம்
By DIN | Published On : 30th July 2019 09:53 AM | Last Updated : 30th July 2019 09:53 AM | அ+அ அ- |

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பிரதமருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திங்கள்கிழமை தொடங்கினர்.
தமிழக மண்வளத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் தொடங்கக்கூடாது. காவிரி,டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதியளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமருக்கு 2.50 லட்சம் அஞ்சல் அட்டைகளை அனுப்ப இப்பெருமன்றம் முடிவு செய்திருந்தது.
இதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றக் குழுவின் சார்பில், திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பிரதமருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்வுக்கு பெருமன்ற மாவட்டச் செயலர் எம். செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். முருகேசன் முன்னிலை வகித்தார். ஏஐடியூசி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் க. சுரேஷ், அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தைத் தொடக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர், கோரிக்கைகள் அடங்கிய அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.