முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மக்கள் குறைகேட்பு நாள்: தம்பதி தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 30th July 2019 09:58 AM | Last Updated : 30th July 2019 09:58 AM | அ+அ அ- |

பணம் மோசடி செய்த வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சித்தனர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, முசிறி வட்டம், சிட்டிலரை கைகாட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (38), அவரது மனைவி கவிதா (34), மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அவர்கள் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சிப்பதை அறிந்து, போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தும்பலத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இந்த தம்பதியிடம் பல்வேறு வகையில் ரூ.5 லட்சமும், மேலும் கடன் பெற்றுத்தருவதாக நிலப்பத்திரத்தையும் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாராம்.
கொடுத்த பணமும் கிடைக்காமல், நிலப்பத்திரமும் கிடைக்காத விரக்தியில், கடந்த மே மாதம் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அருகிலிருந்தோர் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் வாக்குமூலம் பெற்ற முசிறி காவல்நிலையத்தினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், விரக்தியடைந்த தம்பதி மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். போலீஸார் அவர்களை எச்சரித்து, ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கச் செய்தனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.