"அரசுப் பள்ளிகளுக்கான நிதி, கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும்'

அரசுப் பள்ளிகளுக்கான நிதி, கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றார் மதுரை மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.

அரசுப் பள்ளிகளுக்கான நிதி, கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றார் மதுரை மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.
அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில், சுமார் 1500 கி.மீ. தொலைவுக்கு  தமிழகத்தின் 4 முனைகளிலிருந்து மே 25 ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்ட மிதிவண்டி பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை திருச்சியில் நிறைவடைந்தது.
இந்த பயணத்தில் பங்கேற்றவர்களைப் பாராட்டி திருச்சி கீழப்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, வெங்கடேசன் மேலும் பேசியது:
 கல்வியும்,மருத்துவமும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த சேவையாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று இவை இரண்டும் வணிகமயமாகி விட்டது கவலையளிக்கிறது. இவற்றை தனியாரிடம் கொடுக்கும் முயற்சிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் விழுப்புரம்,திருவண்ணாமலை,வேலூர்,கடலூர் மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன.  இம்மாவட்டங்களில் போதுமான உயர் கல்வி நிறுவனங்கள் இல்லை. அரசு கல்வியை முழுமையாகக் கைவிடப் பார்க்கிறது. இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அதற்குப் பின்புலத்திலுள்ள அரசியல் தெரியவரும்.
இந்தியாவில் கடந்தாண்டில் மட்டும் சி.பி.எஸ்.இ.பள்ளிகள் அதிகரித்திருக்கின்றன.
இதன் மூலம் கல்வி வியாபாரமாக்கப்படுகிறது.அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது என்பது அடுத்த தலைமுறையை பாதுகாப்பதற்கான கோரிக்கை.அரசுப்பள்ளிகளுக்கு போதுமான நிதியும்,கட்டமைப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கேரளத்தில் எந்த உயர்அதிகாரியும் பள்ளிகளுக்கு சோதனைகள் நடத்தச் செல்வதில்லை.மாறாக ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்கப்பட்டுள்ள மேலாண்மைக் குழுவே அப்பள்ளியின் வளர்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்துகிறது.இதுபோல பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்களைக் கொண்ட மேலாண்மைக்குழுவை தமிழகத்திலும் ஒவ்வொரு பள்ளியிலும் அமைத்து அரசுப்பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்றார் வெங்கடேசன்.
  முன்னதாக பல்வேறு ஊர்களிலிருந்தும் மிதிவண்டி பிரசாரத்தின் போது எடுத்து வரப்பட்ட பிடிமண்ணை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் வழங்கினர்.
இப்பொதுக்கூட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார்.மாநிலச் செயலர் வி.மாரியப்பன், துணைத் தலைவர் எம்.கண்ணன்  முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவிஞர் நந்தலாலா மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். முன்னதாக, திருச்சி மாவட்டச் செயலர் கா.மோகன்குமார் வரவேற்றார்.நிறைவில் துணைச்செயலர் கே.அருணாச்சலம்  நன்றி கூறினார்.
மணப்பாறையில் வரவேற்பு: குமரியிலிருந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன் தலைமையில் புறப்பட்ட குழுவினர், பல்வேறு மாவட்டங்கள் வழியாக திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தனர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  காமராஜர் சிலைப் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வில், மார்க்சிஸ்ட் வட்டச் செயலர் என்.ராஜகோபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புறநகர் மாவட்டத் தலைவர் பி. பாலு, மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஆர். அருண்பிரசன்னா, மாவட்டத் துணைச் செயலர் செந்தமிழ்,  ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், துணை ஒருங்கிணைப்பாளர் செல்வநாகார்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com