Enable Javscript for better performance
போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்ற காவலர் மர்மச்சாவு- Dinamani

சுடச்சுட

    

    போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்ற காவலர் மர்மச்சாவு

    By DIN  |   Published on : 04th June 2019 09:27 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சி கே.கே.நகரிலுள்ள போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர், மர்ம முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தைச் சேர்ந்த சீ. மணிவண்ணன் நடத்தி வரும் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் இயங்கி வருகிறது. இங்கு பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிய காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள கண்டமங்கலம் தமிழ்ச்செல்வன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர், மது பழக்கத்திலிருந்து மீள்வதற்காக  சிகிச்சை பெற்று வந்தனர். அண்மையில் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு,கடந்த சனிக்கிழமை மூச்சுத்திணறல்  ஏற்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
    இதைத் தொடர்ந்து அவரது உடலை பெற்றுச் சென்ற குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொண்டபோது அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. சிகிச்சையின் போது மருந்து மற்றும் உணவு சாப்பிடுவதற்காக,  மையத்தில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வாடிக்கை என்பதால், அதுபோன்று நிகழ்ந்திருக்கலாம் என உறவினர்கள் கருதி, தமிழ்ச்செல்வன் உடலை அடக்கம் செய்துவிட்டனர். ஆனாலும்,  அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர், தமிழ்ச்செல்வன் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தினர். 
    இதைத் தொடர்ந்து  தமிழ்ச்செல்வனின் உறவினர்கள், நண்பர்கள் கே.கே.நகரிலுள்ள மையத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். தொடர்ந்து அங்குள்ளவர்களிடம் தமிழ்ச்செல்வனின் இறப்பு குறித்து சந்தேகங்கள் கேட்ட போது உரிய பதிலை அளிக்கவில்லையாம்.
    தொடர்ந்து, மற்றவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து கொள்ள, கதவை திறந்து பார்த்த போது 10-க்கும் மேற்பட்டோர் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டும்,சிலர் அறைகளில் அடைக்கப்பட்டு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
    இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    உரிய விசாரணை தேவை : நாங்கள் விசாரித்த வகையில்,கடந்த இரு மாதத்தில் மட்டும் 3 மர்மச்சாவுகள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் ரூ. 15,000 கட்டணம் வசூலிக்கும் இதுபோன்ற மருத்துவ சிகிச்சை மையங்கள் விதிமீறாமல் அன்புடன் நோயாளிகளைக் காப்பதை விடுத்து, விலங்கிட்டு ரௌடிகளை வைத்து அடித்து உதைப்பது முறையல்ல.  இறந்தவரும் காவலர் என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வனின் உறவினர் இளங்கீரன்.
    இறப்பில் சந்தேகம்:  தமிழ்ச்செல்வன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரது உடலில் காயங்களும் உள்ளன. வலிப்பு வந்ததால் தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறி,  மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸில்  வைத்து உடலைக் கொடுத்தனர். எனவே இதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என தமிழ்ச்செல்வன் உறவினர் பாலமுருகன்  கே.கே.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
    கை, கால்களில் விலங்கிடுகின்றனர்: அரியலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  பணியாற்றி வரும் நான், இங்கு போதை மீட்பு மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகிறேன். கை, கால்களில் விலங்கிட்டு வைக்கின்றனர். வலிப்பதாக, வேறு உபாதை இருப்பதாகக் கூறினாலும், பிறரிடம் பேசினாலும் அடிதான் கிடைக்கும். இதனால் யாரும் எதுவும் சொல்வதில்லை என்கிறார் இங்கு சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலர் வெங்கடேசன்.
    பலரது உடல்களிலும் காயங்கள்:  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தவர்களின் உறவினர்கள், சிகிச்சை மையத்திலிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பலரது உடலில் குச்சிகளால் அடித்தது, இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்ததற்கான காயங்கள் இருந்தன.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp