அனைவருக்குமான கல்வியைக் கொடுத்து குழந்தைத் தொழிலாளர்களை காக்க வேண்டும்
By DIN | Published On : 12th June 2019 08:33 AM | Last Updated : 12th June 2019 08:33 AM | அ+அ அ- |

மத்திய, மாநில அரசுகள் அனைவருக்கமான கல்வியை குழந்தைத் தொழிலாளர்களுக்கு கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்ய முடியும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக, பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182- ஆவது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு, இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தும், குழந்தைகள் இன்றுவரை துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகிக் கொண்டே உள்ளது. யுனிசெப்அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட, 15 கோடி சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சமீபத்திய கணக்கெடுப்புத் தகவலின் அடிப்படையில்,இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்' என்ற அறிக்கையை வெளியிட்ட யுனிசெப், கேரளாவில் 82 சதவிகிமும், தமிழகத்தில் 81.3 சதவிகிதமும் குழந்தைத் தொழிலாளர் இருப்பதாக வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 2.75 லட்சம் குழந்தைகள் முழுநேர ஊழியர்களாகவும், பள்ளிக்குப் பின் பணியாற்றியவர்களாகவும் உள்ளதாகக் கூறியுள்ளது.
இன்றைக்கு கல்வி பயிலக்கூடியவர்களில் 23 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்கல்வி பெறக்கூடியவர்களாகவும், மீதமுள்ள 77 சதவிகிதத்தினர் தொழில் சார்ந்து படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லக்கூடிய கட்டாய நிலைக்கு உள்ளதாக மற்றொரு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மத்திய மாநில அரசுகள் அனைவருக்குமான கல்வியை குழந்தைத் தொழிலாளர்களுக்கு கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்ய முடியும்.