சுடச்சுட

  

  தியான கூடம், ஒலி, ஒளி விளக்குகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், திப்புசுல்தான் பீரங்கி மாதிரி என பல்வேறு வசதிகளுடன் ரூ.71.50 லட்சத்தில் திருச்சி மாநகராட்சியின் வெள்ளி விழா பூங்கா தயாராகி வருகிறது.
  நகராட்சியாக இருந்து வந்த திருச்சி, 1994, ஜூன் 1 ஆம் தேதி  4 கோட்டங்களைக் கொண்டு மாநகராட்சியாகத் தரம்  உயர்த்தப்பட்டது. 167.23 சதுர கிலோ மீட்டர்பரப்பைக் கொண்ட 
  இந்த மாநகராட்சி 65 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது.
  பொலிவுறு நகரம், தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் இணைந்துள்ள திருச்சி மாநகராட்சி 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது.  இதன் நினைவாக, பொன்மலை கோட்டத்திலுள்ள  பீமநகர் நியூ ராஜா காலனியில் 9,600 சதுர அடி பரப்பில் வெள்ளி விழா பூங்கா உருவாக்கப்படுகிறது.  மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.71.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டமைக்கப்படும் இந்த புதிய பூங்காவில், மாநகர மக்களின் பொழுது போக்குகளுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  திப்புசுல்தான் பீரங்கி மாதிரி:  குறிப்பாக ஸ்ரீரங்கப்பட்டணத்தின் திப்புசுல்தான் பயன்படுத்திய பீரங்கியின் மாதிரி வடிவம் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுல்லாது புல்தரையின் மீது பூம்புகார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிங்கத்தின் சிலையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
   கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளதை போன்று ஒலி, ஒளி அமைப்புகளுடன் கூடிய எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன.
   பொதுமக்கள் ஓய்வெடுப்பதற்காக இருக்கைகள்  அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனதுக்கு இனிய இசையை கேட்கும் வகையில் ஒலி பெருக்கிகளும் இடம் பெற்றுள்ளன. 
  இதுமட்டுமல்லாது பூங்காவில்  நடைப்பயிற்சி தளத்தில் நடந்து செல்லும் மக்கள் இசையே கேட்டுக் கொண்டே செல்லும் வகையில் ரம்மிய ஒலியை எழுப்பும் இசைக்கருவிகளும் இடம்பெற்றுள்ளன. 
  4 கோட்டங்களில் 37 பூங்காக்கள் அழகுப்படுத்தல்:  பொலிவுறு நகரத்திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியை அழகுபடுத்தும் வகையில் ஏற்கெனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், புனரமைக்கவும், செயற்கை நீரூற்றுகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்காக 4 கோட்டங்களிலும் 37 பூங்காக்கள் ரூ.9.65 கோடியில் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. 
   இதுமட்டுமல்லாது மாநகராட்சியின் வெள்ளி விழா ஆண்டை குறிப்பிடும் வகையில்,ரூ.71.50 லட்சத்தில் பீமநகரில் வெள்ளி பூங்கா கட்டமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒலி, ஒளி விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வார இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார் மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான. ந.ரவிச்சந்திரன்.
   


  யோகா, தியானத்துக்காக சிறப்பு அரங்கம்

  பூங்காவின் முகப்பில் வெள்ளிவிழா ஆண்டை குறிக்கும் வகையில் வண்ண, வண்ண எல்.இ.டி விளக்குகளால் சிறப்பு வளைவு இடம்பெறுகிறது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் தியானம், யோகாப் பயிற்சியை மேற்கொள்வதற்காக சிறப்பு அரங்கமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. 
  இவைத்தவிர, நவீன உபகரணங்களுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கான பிரத்யேக உபகரணங்களுடன் கூடிய பகுதி இடம்பெற்றுள்ளது.
  பூங்கா முழுவதும் இரவிலும் பகல்போன்ற ஒளியை ஏற்படுத்தும் வகையில் 25 பெரிய விளக்குகளும், 18 சிறிய அளவிலான எல்இடி விளக்குகளும் இடம்பெற்றுள்ளன. 
  இந்த பூங்காவில் 95 சதவிகிதப் பணிகள் முடிவுற்றுள்ளன. எஞ்சியுள்ள  பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai