மக்களவைத் தொகுதி தோறும் கடவுச்சீட்டு சேவை மையம்: திருச்சி மண்டலத்தில் மேலும் 4 தொடக்கம்

மக்களவைத் தொகுதி தோறும் கடவுச்சீட்டு சேவை மையம் என்ற வகையில், திருச்சி மண்டலத்தில் மேலும் 4  அஞ்சலக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தொகுதி தோறும் கடவுச்சீட்டு சேவை மையம் என்ற வகையில், திருச்சி மண்டலத்தில் மேலும் 4  அஞ்சலக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, திருச்சி என இரு இடங்களில் மட்டுமே கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  பின்னர், மதுரை மற்றும்  கோவை ஆகிய  நகரங்களிலும் இந்த அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.
முதலில் திருச்சி அலுவலகத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருந்தது.மதுரையில் அலுவலகம் தொடங்கிய பின்னர் அந்த எண்ணிக்கை 8 ஆகக் குறைந்தது.
 2010- இல் மத்திய வெளியுறவுத்துறை தனியாருடன் இணைந்து கடவுச்சீட்டு விநியோகத்தை செயல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து  ஒவ்வொரு கடவுச்சீட்டு அலுவலகக் கட்டுப்பாட்டிலும், அருகாமையிலுள்ள மாவட்டத் தலைநகரங்களில் 1 அல்லது 2 சேவை மையங்கள் தொடங்கப்பட்டன.
திருச்சி மண்டல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் தலா ஒரு கடவுச்சீட்டு சேவை மைய அலுவலகம் தொடங்கப்பட்டது. திருச்சி மையத்தில்  திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டத்தினரும், தஞ்சை மையத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டத்தினரும்  கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருந்தது.
இந்நிலையில் திருச்சி மண்டலத்தில், நாகை, திருவாரூர் (திருத்துறைப்பூண்டி அஞ்சலகத்தில்), கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தலைமை அஞ்சலகங்களிலும் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக காரைக்காலில் உள்ள தலைமை அஞ்சலகத்திலும் ஒரு  விண்ணப்பிக்கும் மையம் அமைக்கப்பட்டு அதுவும் திருச்சி மண்டல அலுவலகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது மக்களவைத் தொகுதிக்கு ஒரு இடத்திலாவது கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் சேவை மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.  இதன்படி,திருச்சி மண்டலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் அனைத்திலும் (புதுக்கோட்டை, அரியலூரைத் தவிர) கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் சேவை மையங்கள் அல்லது அஞ்சலக கடவுச்சீட்டு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இது குறித்து திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலர் ஆனந்த் கூறியது:
கடவுச்சீட்டு விநியோகம் மிக எளிமையாகவும், அதே நேரம் குறுகிய காலத்திலும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஒருமுறை வந்து விண்ணப்பித்துச் சென்றாலே போதுமானது. அதன் பின்னர் எந்த விதமான சான்றுகளையும் ஒப்படைக்கவேண்டும் என்றாலும், கட்செவி (வாட்ஸ்அப்) மற்றும்  மெயில் மூலம் அனுப்பும் முறை உள்ளது.
பொதுமக்கள் கடவுச்சீட்டு தொடர்பான தங்களது குறை மற்றும் தேவைகளை  வாட்ஸ்அப் செயலி மூலம்  தெரிவித்தாலே போதும்.  திருச்சி அலுவலகத்துக்கு வரும் கோரிக்கைகள் உடன் பரிசீலித்து, அது குறித்த விவரங்கள் பதிலாக அளிக்கப்பட்டு வருகின்றன.  
மக்களவைத் தொகுதிக்கு ஒரு கடவுச்சீட்டு சேவை மையம் அல்லது அஞ்சலக கடவுச்சீட்டு மையம் மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் அலைச்சலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மண்டலத்தில் கரூர்,  பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 இடங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
காவல்துறை அறிக்கையும் ஆன்லைன்படுத்தப்பட்டுள்ளது. எனவே விரைவாக கடவுச்சீட்டுகள் கிடைக்கின்றன. அதேபோல கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவு செய்யும்போது, அடுத்தநாளே விண்ணப்பிக்க  தேதி கிடைக்கின்றது. இடைத்தரர்கள் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தால், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com