ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு: மனிதச்சங்கிலிக்கு அணி திரள வேண்டும்-வைகோ வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 23இல் நடைபெறும் மனிதச் சங்கிலி இயக்கத்தில் அனைத்துத் தரப்பினரும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 23இல் நடைபெறும் மனிதச் சங்கிலி இயக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் அணி திரள வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழகத்தில் குடிநீருக்காக மக்கள் பல துயரங்களை சந்தித்து வருகின்றனர். தமிழத்தில் இன்னும் 15 நாள்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படப் போகிறது. ஆளும் கட்சியினர் மழை வரும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். வாய்க்கால்களையும், கால்வாய்களையும் தூர் வாரியிருந்தால் ஓரளவு குடிநீர்ப் பற்றாக்குறையை சரி செய்திருக்க முடியும். ஆனால் இதை அரசு செய்யவில்லை.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்திட வேண்டும்.  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள்.துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகி மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசு தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கே  தற்போது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை அரசு வழங்கி உள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றதாகும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ராமேசுவரம் வரை 600 கி.மீ.தூரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.இப்போராட்டத்தை ஜூன் 23 ஆம் தேதி நடத்திக்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.இப்போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டு அரசியல்வாதிகள்,விவசாயிகள்,மாணவர்கள்,தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக மக்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
மூன்று மாதங்களாக தேடப்படும் முகிலனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.அவர் இருக்கும் இடம் குறித்து ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.இது ஒரு மனித உரிமை தொடர்பான பிரச்னையாகும்.அவருக்கு ஏதேனும் நிகழ்ந்திருந்தால் அதற்கு அரசு தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com