பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்
By DIN | Published On : 14th June 2019 09:45 AM | Last Updated : 14th June 2019 09:45 AM | அ+அ அ- |

திருச்சி அருகே அரசு உதவி பெறும் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கழிப்பறை, நிழல் மேடை, வழிபாட்டு மேடை அமைத்துக் கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு மேல்நிலை பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர், மாணவிகள் ஒருங்கிணைந்து கற்பக விருட்சம் என்ற அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் தாங்கள் படித்த பள்ளிக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் ரூ. 3.60 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான பெண்கள் கழிப்பறை, வழிபாட்டு மேடை மற்றும் நிழல் மேடை ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இந்தக் கட்டடங்களை வியாழக்கிழமை திறந்து வைத்து பள்ளியில் மரக்கன்று நட்டார். மேலும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். ஏழை கைம்பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி ஜீவமணி, தலைமை ஆசிரியர் கதிர்வேல், அறக்கட்டளை நிர்வாகிகள் சத்யநாராயணன், முருகானந்தம், முன்னாள் மாணவர்கள் சிதம்பரம், சந்திரன், நடேசன் சரவணன், பாரதிராஜா, பார்த்தசாரதி, சித்ரா, மீனாட்சி, அம்சா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.