ஜூன் 22-இல் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு: நாராயணசாமி, காதர்மொகிதீன் பங்கேற்பு

திருச்சியில் ஜூன் 22 ஆம் தேதிஇஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு  உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது.


திருச்சி: திருச்சியில் ஜூன் 22 ஆம் தேதிஇஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு  உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனர் இ. ஷாகுல்ஹமீது செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
இனாம்குளத்தூரிலுள்ள ஆயிஷா அறக்கட்டளை பல்வேறு கல்வி மற்றும்  சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.  இதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் தொடக்கம்,  கவிக்கோ அப்துல் ரகுமான் நூலகத் திறப்பு, வரலாற்றில் வாழ்பவர்கள் நூல் வெளியீட்டு விழா ஜூன் 22 ஆம் தேதி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு ஆராய்ச்சி நிறுவனத்தை தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார் தொடக்கி வைக்கிறார். அப்துல்ரகுமான் நூலகத்தை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி  திறந்து வைத்து உரையாற்றுகிறார்.  வரலாற்றில் வாழ்பவர்கள் நூலை இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டு பேசுகிறார்.
 தொடர்ந்து முனைவர் மு. அப்துல்சமது தலைமையிலும், முனைவர் தி.மு. அப்துல்காதர் தலைமையிலும் இரு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. நிகழ்வில் தொடர்ந்து, வரலாற்று அறிஞர்கள் டாக்டர் ஜீவானந்தம், ஜெ. ராஜா முகமது, செ. திவான், கு. ஜமால்முகமது ஆகியோருக்கு பாராட்டு விழாவும், நூலாக்கக் குழுவினருக்கு பாட்டரங்கமும் நடைபெறுகிறது. 
பாராட்டு நிகழ்வில் புதுச்சேரி பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நசீர்அகமது,  மக்களவை உறுப்பினர்கள் சு. திருநாவுக்கரசர், செ. ஜோதிமணி, நவாஸ்கனி,  தொல்.திருமாவளவன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இரவு நடைபெறும் வாழ்த்தரங்கில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹிருல்லா,திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சட்டப்பேரவை உறுப்பினர் தமீம் அன்சாரி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர். 
நிகழ்வில் பக்தியார் அலிஷா மற்றும் தியாகி அமீர்ஹம்ஸா ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொற்கிழியை சிங்கப்பூர் எம்.ஏ. சாகுல்ஹமீது மற்றும் சீனா தானா செய்யது அப்துல்காதர் வழங்குகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ். பஜ்லுர் ரகுமான், எஸ். ஹபிபுர்ரகுமான் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com