அண்ணா விளையாட்டரங்கில் மாநில தடகளப் போட்டி தொடக்கம்
By DIN | Published On : 23rd June 2019 04:09 AM | Last Updated : 23rd June 2019 04:09 AM | அ+அ அ- |

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 2 நாள்கள் நடைபெறும் 92- ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
நியூரோ ஒன் மருத்துவமனை, தமிழ்நாடு மற்றும் திருச்சி மாவட்ட தடகளச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டி தொடக்க விழாவுக்கு, மாவட்ட தடகளச் சங்கத் தலைவர் எம். ராமசுப்பிரமணி தலைமை வகித்தார். மாநகரக் காவல்ஆணையர் ஏ.அமல்ராஜ் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில், மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவரும், சட்டபேரவை உறுப்பினருமான ஜி.அன்பழகன்,
மாவட்ட தடகளச் சங்கத்தின் இயக்குநரும், மாநகரக் காவல் துணை ஆணையருமான ஆ.மயில்வாகனன், நியூரோஒன் மருத்துவமனை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் பிரபு, ஒலிம்பியன் சுப்ரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக திருச்சி மாவட்ட தடகளச் சங்கச் செயலர் டி.ராஜூ வரவேற்புரையாற்றினார். மாநில தடகளச் சங்க செயற்குழு உறுப்பினர் லதா, சங்கத்தின் கொடி ஏந்தினார்.
முதல் நாள் நடைபெற்ற போட்டியில், 100 மீ, 400 மீ, 1500 மீ மற்றும் 15000 தொடர் ஒட்டம், தடை தாண்டும் ஒட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், கோல் ஊன்றி தாண்டுதல், உயரம் தாண்டுதல் என இருபாலருக்கும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையும் போட்டி நடைபெறவுள்ளது.