உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றார்  திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு.


உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றார்  திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு.
தமிழகத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி, திருச்சியில் மாவட்ட திமுக, மாநகர திமுக சார்பில், சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு பேசியதாவது: தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸில் உள்ள சிலர் பேசுவது சரியாக இல்லை. எத்தனை ஆண்டுகாலம் தான் காங்கிரசுக்கு நாங்கள் பல்லக்கு தூக்குவது? என்னுடைய தனிப்பட்ட விருப்பம் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். நாம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தனித்துதான் போட்டியிட வேண்டும். இல்லையென்றால், திருச்சியில் மட்டுமாவது திமுக தனித்துப் போட்டியிட அனுமதி கொடுங்கள் என தலைவரிடம் கேட்க இருக்கிறேன். இருந்தாலும் கூட்டணி விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். காங்கிரசுடன்  கூட்டணி வைத்தாலும் அக் கட்சியினரின் வெற்றிக்குப் பாடுபடுவோம் என்றார். கே.என். நேருவின் இந்த பேச்சு, திமுக, காங்கிரஸ் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான சு. திருநாவுக்கரசரின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில்தான் கே.என். நேரு பேசியிருப்பதாகவும், நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பதில் அளித்தார்.
இந்தநிலையில், சனிக்கிழமை மாலை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, ஆர்ப்பாட்டத்தில் தான் பேசிய கருத்துக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸýக்கு அதிக இடம் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, தென்சென்னை மாவட்டத்தில் அதிக இடங்கள் பெற வேண்டும் என்று அந்த மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் நாளிதழ்களில் வந்துள்ளன. காங்கிரஸ் கட்சியினருக்கே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் உள்ள நிலையில், திமுக-வினருக்கும் அந்த எண்ணம் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே அப்படி பேசினேன். நான் கூறிய கருத்து எனது தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டே பேசினேன்.
கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த போதே காங்கிரஸôர், திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், திமுக குறித்தும் பல்வேறு விமர்சனங்களை செய்துள்ளனர். இருப்பினும், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தான் நாங்கள் இப்போதுவரை கூட்டணியில் உள்ளோம். கூட்டணி என்பது தலைமை எடுக்கும் முடிவு. காங்கிரஸôர் பேசி வரும் கருத்துகளால் எந்தவித பிளவும் வந்துவிடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தலைமைக்குத்  தெரியப்படுத்துவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com