நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
By DIN | Published On : 23rd June 2019 04:09 AM | Last Updated : 23rd June 2019 04:09 AM | அ+அ அ- |

மணப்பாறையில் ஆழ்குழாய்க் கிணற்றில் கிடைக்கும் நீரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தரக் கோரி, நகராட்சி அலுவலகத்தை பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மணப்பாறை நகராட்சியின் 16 ஆவது வார்டுக்குள்பட்ட சேதுரத்தினபுரத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லையாம். பழுதாகியுள்ள ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைத்துத் தர வேண்டும். தண்ணீர் திடைக்கும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து பொதுமக்கள் குடிநீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அடுத்த தெருவிற்குத் தண்ணீர் எடுக்கச் செல்லும் நிலை உள்ளதால், ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கக் கோரி, இப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாத நிலையில், தகவலறிந்து வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் ராமலிங்கம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.