மலேசிய விமானத்தில் ராமநாதபுரம் பயணி உயிரிழப்பு

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.  

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.  
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு 120-க்கும்  மேற்பட்ட பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், காக்கூர் ராசிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனும் (31) பயணித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதும், அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றனர். ஆனால் ராமச்சந்திரன் மட்டும் இருக்கையில் தூங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள், அவரை எழுப்பிய போது எந்தவித உணர்வும் இல்லாமல் இருந்தார். உடனடியாக பணிப்பெண்கள் விமான நிலைய மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள் விரைந்து சென்று ராமச்சந்திரனை பரிசோதித்த போது, அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் தெரிவித்தனர்.
 இதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்தனர். ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக ராமச்சந்திரனை விமானத்தில் இருந்து இறக்கிய போது அவர் திடீரென மரணமடைந்தார். இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து ராமச்சந்திரனின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து,  உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். இதனிடையே ராமச்சந்திரன் விமானத்தில் இருந்து இறங்கியதும் இறந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் ராமச்சந்திரனின் உறவினர்கள், விமானத்தில் வரும் போதே ராமச்சந்திரன் இறந்துள்ளார். விமான பணிப்பெண்கள் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர். எனவே ராமச்சந்திரன் பலியானதற்கு இழப்பீடாக காப்பீடு தொகை வழங்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ,  காவல் ஆய்வாளர் காவேரி ஆகியோர் ராமச்சந்திரனின் உறவினர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்து,  திருச்சி அரசு மருத்துவமனைக்குஉடலை அனுப்பி வைத்தனர்.
 ராமச்சந்திரனுக்கு திருச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து விமானநிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com