மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம் நடத்திய அதிமுகவினர்
By DIN | Published On : 23rd June 2019 04:08 AM | Last Updated : 23rd June 2019 04:08 AM | அ+அ அ- |

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், பல்வேறு கோயில்களில் மழை வேண்டி சனிக்கிழமை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சனிக்கிழமை அதிமுக சார்பில் சிறப்பு யாகம் நடத்த, அக்கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், உறையூர் அருள்மிகு காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேசுவரசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயில், அம்மா மண்டபம் படித்துறை, திருவெறும்பூர் சக்தி விநாயகர் திருக்கோயில் ஆகியவற்றிலும், புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், திருநெடுங்களத்திலுள்ள அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயிலிலும் சனிக்கிழமை மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் மாநகர் மாவட்டச் செயலரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான ப.குமார், புறநகர் மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வராசு, பரமேசுவரி முருகன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி மற்றும் அதிமுக-வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.