இடிந்து விழும் நிலையிலுள்ள பாலத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 25th June 2019 08:31 AM | Last Updated : 25th June 2019 08:31 AM | அ+அ அ- |

லால்குடி வட்டம், நெய்குப்பையில் இடிந்து விழும் நிலையிலுள்ள பெருவளை வாய்க்கால் பாலத்தை முழுமையாக அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த ஊராட்சியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், பெருவளை வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 30 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இரும்புப் பாலத்தின் வழியாகச் சென்றுவருகின்றனர். வேலைக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள் போன்றோர் செல்வதற்கும், இறுதி ஊர்வலம் செல்வதற்கும் இந்த பாலத்தைத்தான் பயன்படுத்தி கடந்து செல்ல வேண்டும்.
ஆனால், தற்போது இப்பாலத்தின் தூண்கள் துருப்பிடித்து அந்தரத்தில் தொங்குகின்றன. பாலம் இடிந்து விழுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும் முன்னரே, பாலத்தை அகற்ற வேண்டுமென இப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில், லால்குடி வருவாய் வட்டாட்சியர் சத்தியபாலகங்காதரன் நெய்குப்பை கிராமத்துக்குச் சென்று, சேதமடைந்த நிலையிலுள்ள பாலத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் அளித்தார்.