தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கும் கட்டாயக் கட்டணம் வசூலிப்பதாக புகார்

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறி,  இந்திய ஜனநாயக

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறி,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடன் ஆட்சியரகத்தில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர்.
இச்சங்கத்தின் ஸ்ரீரங்கம் பகுதிக் குழு சார்பில், அதன் செயலர் தர்மா, மாவட்டத் தலைவர் சந்திரபிரகாஷ், லோகு, வெற்றி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர்  மேல் சட்டை அணியாமலும், கோவணம் கட்டியவாறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்தனர்.
 தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து, தர்மா கூறியது:
ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அரசின் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், அனைத்துக் கட்டணங்களையும் வசூலித்து, பள்ளியிலிருந்து வெளியேறும்போது மொத்தமாக தருவதாகக் கூறுகின்றனர். வேறு பள்ளிக்கு மாறுவதால் செலுத்திய கட்டணத்தை திரும்ப கேட்டால் மாற்று சான்றிதழ் வழங்க மறுத்து கல்வி கற்க முடியாமல் செய்கின்றனர். அனைத்து தனியார் பள்ளிகளிலும் இதேநிலைதான் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேவை தனி ஊராட்சி: தொட்டியம் வட்டத்தைச் சேர்ந்த நெசவாளர் பெண்கள் மேம்பாட்டு இயக்கத்தினர், கோடியம்பாளையத்தை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என கோரி மனு அளித்தனர். 
இயக்கத்தின் தலைவர் வெள்ளையம்மாள் தலைமையில் வந்த பெண்கள் அளித்த மனு:  தொட்டியம் வட்டம், கோடியம்பாளையத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். ஆனால், கிராம நிர்வாக அலுவலகம், துணை சுகாதார நிலையம், கால்நடை கிளை நிலையம், ஊராட்சி மன்றம் உள்ளிட்ட எந்த அலுவலகமும் இல்லை. இதனால், அரசு உதவிகளைப் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, தங்களது கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் ஆட்டோவுக்கு அனுமதி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் ஆட்டோவுக்கு அனுமதியளிக்க வேண்டும். மலைக்கோட்டை என்எஸ்பி சாலையில் ஆட்டோவுக்கு அனுமதியளிக்க வேண்டும். 
பயணிகள் ஆட்டோ இயக்க 8ஆம் வகுப்பு கட்டாயம் என்ற உத்தரவு நீக்கப்பட்டிருப்பதை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உடன் அமல்படுத்த வேண்டும் என திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கப் பொதுச் செயலர் மணிகண்டன் தலைமையில் வந்த, ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பச்சமலையில் தண்ணீர் தட்டுப்பாடு: துறையூர் வட்டம், பச்சமலையில் உள்ள எருமைப்பட்டி கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இக் கிராமத்தில் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றில் தண்ணீர் வற்றி, குடிநீர் எடுக்க முடியாத சூழல் உள்ளது.
 இதனால், அருகில் உள்ள கிராமங்களுக்கு 2 கி.மீ. மேல் நடந்து சென்றே தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது. 
எனவே, தங்களது பகுதிக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என எருமைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com