பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு 25% அதிகரிப்பு

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு 2018- 19 ஆம் ஆண்டில்   25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றார்

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு 2018- 19 ஆம் ஆண்டில்   25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றார் தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம்.
அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தவுள்ள இணையவழிக் கலந்தாய்வு (ஆன்லைன்-கவுன்சலிங்)  குறித்த விழிப்புணர்வை பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு சுயநிதி பொறியில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில், தொலைநோக்கு-2019 எனும் தலைப்பில் திருச்சி கலையரங்க திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ். முனிரத்னம் தலைமை வகித்தார். செயலர் பி. செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஐசிடி அகாதெமியின் செயல் துணைத் தலைவர் பி. அன்புத்தம்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஜிபிஎஸ் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ஆர். ராஜகோபாலன், கே7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கே. புருஷோத்தமன் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அலுவலர்கள் கருத்தரங்கில் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
வழக்கமாக அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிகழாண்டு முதல் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, இக் கலந்தாய்வை எதிர்கொள்வற்கான வழிமுறைகள், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான செயல்முறைகள், பொறியியல் பட்டம் முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து இக்கருத்தரங்கில் விளக்கிக் கூறப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ். முனிரத்னம், செயலர் பி. செல்வராஜ் ஆகியோர் கூறியது:
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாக பொய்யான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஆண்டுதோறும் பொறியியல் துறைக்கான வேலைவாய்ப்புகள் மட்டுமே அதிகரித்து வருகிறது என்பது நிதர்சன உண்மை. இந்தியாவில் ஒட்டுமொத்தமுள்ள பொறியாளர்களில் 40 சதவிகிதப் பொறியாளர்கள் தமிழகம், ஆந்திரத்தில் உள்ளனர். இதன்காரணமாக இந்த மாநிலங்களில் தொழில்வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு 1.20 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. நிகழாண்டு (2018-19) மேலும் 25 சதவிகிதம் அதிகரித்து 1.50 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
சிவில், மெக்கானிக்கல்,  இசிஇ, இஇஇ, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஏரோனாட்டிக்கல், மெக்கட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. டிசிஎஸ், சிடிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், சிண்டல், கூகுள், எல்அன்டி, ஐபிஎம் உள்ளிடட் பல்வேறு முன்னணி நிறுவனங்கள்  படித்து முடித்து வெளியேறும் பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும்  வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றன.
பொறியியல் பட்டப்படிப்போடு அத்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், அயல்நாட்டு மொழிகள், திறன் மேம்பாடு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதன் மூலம் எளிதில் வேலைவாய்ப்பை பெற முடியும். பிற துறைகளைவிட அதிக ஊதியம் பொறியியல் துறை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றனர்.
சாரநாதன் பொறியியல் கல்லூரிச் செயலர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரித் தலைவர் நிஜாம், ரோவர் பொறியியல் கல்லூரித் தாளாளர் வரதராஜன்,  தனலெட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ்,  சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி முனைவர் வி.எம். சாந்தி  உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்று பேசினர்.
இக் கருத்தரங்கில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிளஸ் 2 முடித்த மற்றும் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருச்சியைத் தொடர்ந்து மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் இக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com